இது மட்டுமல்லாமல் இன்றைய உலகில் இனம், மொழி, கலாச்சாரம், மதம் போன்ற வேறுபாடுகளை கடந்து திருமண பந்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. என்ன தான், கணவன் மனைவி இடையே இந்த விஷயங்களில் வேற்றுமை இல்லை என்றாலும் கூட, மாமியார்-மருமகள் இடையே சில சமயங்களில் வேறுபாடுகள் தோன்றி சண்டை அமைய காரணமாக இருக்கின்றன. அவ்வபோது சண்டைகள் வருவதும், அதை தொடர்ந்து சமாதானங்கள் ஏற்படுவதும் இயல்பானது தான். என்றாலும் கூட தினசரி சண்டை நீடித்து வந்தால் அதை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டியிருக்கும்.
மாமியாரை பாராட்ட தவறாதீர்கள் : உங்கள் எண்ண ஓட்டத்திற்கும், மாமியாரின் எண்ண ஓட்டத்திற்கும் இடையே ஒற்றுமை இல்லாமல் போகலாம். அவர் செய்யும் பல காரியங்கள் அநேக நேரங்களில் உங்கள் மனதை புண்படுத்தும். ஆனால், அதனை பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட்டு அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் மனம் மகிழும் படியான விஷயங்களை அவர்கள் செய்யும் போது எல்லோர் மத்தியிலும் அவர்களை மனம் நிறைவாக பாராட்ட தவறாதீர்கள்.
உணர்வுகளை புரிய வையுங்கள் : தனிப்பட்ட நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் அடிப்படையில் உங்களுக்கு என்று சில உணர்வுகள் இருக்கும். அவை புண்படும்படியாக உங்கள் மாமியார் பேசும்போது அந்த சமயத்திலேயே வாக்குவாதத்தை ஆரம்பித்து விடாமல், அதற்கு பிறகு அமைதியான சூழலில் அது குறித்து எடுத்துக் கூறுங்கள். எந்த சமயத்திலும் உங்கள் கணவரை வளர்த்தெடுத்த தாயார் அவர் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே உங்கள் வார்த்தைகளை கவனமாகவும், கனிவாகவும் எடுத்து வையுங்கள். இது உங்கள் மீதான நல்லெண்ணத்தை அதிகரிக்க உதவும்.
ஆட்சேபனைகளை தெரியப்படுத்துங்கள் : உங்கள் மாமியார் கடைப்பிடிக்கும் அதே நம்பிக்கைகளை நீங்களும் அப்படியே அடியொற்றி கடைப்பிடிக்க வேண்டும் என்று கிடையாது. உங்களுக்கு என்று தனிப்பட்ட சுதந்திரம், நம்பிக்கை ஆகியவை உண்டு என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். நீங்கள் சொல்லும் விதம் பிடித்து விட்டால் உங்கள் கருத்துக்களை ஆமோதித்து உங்களுக்கு ஏற்ப அவர்கள் மாறிவிடுவார்கள்.
மாமியாரை கேட்டு முடிவு செய்யுங்கள் : வீட்டில் மிக முக்கியமான விஷயங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் போது மாமியாரைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது சண்டை சச்சரவுகளை வரவழைக்கும். ஆகவே எந்த ஒரு முக்கிய விஷயம் என்றாலும் அவர்களது கருத்துகளை கேட்டு ஆலோசனை செய்து அதன் அடிப்படையில் முடிவு செய்யுங்கள். நீங்கள் மதிப்பளித்து அவர்கள் கருத்தைக் கேட்பது இருவருக்குமிடையே பந்தம் அதிகரிக்க உதவிகரமாக இருக்கும்.