காரணமே இல்லாமல் அல்லது எதற்காகவென்று தெரியாமல் அடிக்கடி கோபம் வருகிறதா? எரிச்சலான மனநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறதா? ஏன் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். நாம் எதிர்பார்க்காத விதங்களில் எல்லாம், மன அழுத்தமும், மன பதட்டமும், மனச்சோர்வும் நம் கோபத்தை அதிகரிக்கும். அதனால், ஒருவர் கோபத்தில் கத்துகிறார் என்றாலே அவர் முன்கோபம் நிறைந்தவர் என்று முடிவு செய்வது தவறானது. அலுவலகலத்திலேயே மிக மிக அமைதியான நபர் என்று அறியப்பட்டவருக்குக் கூட இது நிகழலாம்.
எல்லைகள் இல்லை : நீங்கள் பழகும் நபர்களிடம் எல்லைகளை வகுத்துப் பழகாமல் இருந்தால், அவர்கள் சொல்வதற்கெல்லாம் நீங்கள் ஆம் என்று தலையாட்ட வேண்டும். இது உங்களை வலுகட்டாயமாக எதையாவது செய்யச் சொல்வது போல இருக்கும். நீங்கள் எரிச்சலாக உணரலாம். உங்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் அனுமதிக்காமல் எல்லைகளை வகுக்க வேண்டும்.
என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் : ‘எல்லாமே என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க வேண்டும்’ என்று நீங்கள் நினைப்பது மிகவும் மோசமான, எதிர்மறையான குணம். உங்கள் கட்டுப்பாட்டை மீறி ஏதேனும் இயல்பாக நடந்தாலும் அது உங்கள் கோபத்தை பல மடங்கு அதிகரிக்கும். ஒரு செயலையோ அல்லது சூழ்நிலையையோ உங்கள் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றால் நீங்கள் விரக்தியின் உச்சத்துக்கு சென்று, கோபத்தில் வெடித்துச் சிதறக்கூடும்.
உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது : மற்றவர்களை கட்டுப்படுத்துவது என்பது கோபத்தை உருவாக்கும் அதே நேரம், உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதும் அதீதமான மன அழுத்தம் உண்டாக்கி கோபமாக வெளிவரும். எல்லாரும், எல்லா நேரத்திலும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் வைத்திருக்க முடியாது. எவ்வளவு அதிகமாக உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாவீர்கள்.
உடல் நலக் கோளாறுகள் : பல நேரங்களில் உடல் உபாதைகள் காரணங்கள் தெரியாமல் கோபம் ஏற்படும். ஹார்மோன் குறைபாடுகள், மனநலக் கோளாறுகள் (பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்), ADHD எனப்படும் கவனச்சிதறல் நோய், மாதவிடாய்க் கோளாறுகள், தைராய்டு குறைபாடு உள்ளிட்ட பல நோய்களும், உடல் நலக்கோளாறுகளும் அடிக்கடி கோபம் உண்டாக்கும். சரியான காரணத்தைக் கண்டறிய, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும்.