வாழ்வின் அனைத்து கட்டங்கள் அல்லது நிலைகளில் ஒருவர் மீண்டும் மீண்டும் நிராகரிப்பை எதிர்கொள்வது என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கும். உறவுகளாக இருக்கட்டும் அல்லது தொழில் வாய்ப்புகளாக இருக்கட்டும், பணியிடங்களாக இருக்கட்டும் எங்கு சென்றாலும் ஒருவர் நிராகரிப்பை மட்டுமே எதிர்கொள்பவர் என்றால் அது அவரை மிகவும் பலவீனப்படுத்தும், ஒருவித அச்சத்திலேயே வாழ வைக்கும்.
என்னால் எதையும் செய்ய முடியாது, சாதிக்கவும் முடியாது என்ற எதிர்மறை எண்ணமே கடைசியில் முடிவாக இருக்கும். இருப்பினும் நாம் இங்கே யோசிக்க வேண்டியது என்னவென்றால் ஒருவர் ஏன் தனது வாழ்வில் அடிக்கடி நிராகரிப்பை எதிர்கொள்கிறார்! அதற்கு முக்கிய காரணங்கள் என்ன என்பது தான்.. ஒருவர் தனது வாழ்வில் அடிக்கடி நிராகரிப்புகளை சந்திக்க சில சாத்திய காரணங்களை இங்கே பார்க்கலாம்.
சிறுவயது அதிர்ச்சி.. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சிகள் அல்லது நிராகரிப்புகள் எதிர்மறை, விரக்தி மற்றும் கோபம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வலுவான உணர்வுகளை உருவாக்க கூடும். அதே போல குழந்தை பருவத்தில் உங்கள் மீது உணர்ச்சி அல்லது உடல் ரீதியான பாதிப்பை ஒருவருக்கு அவரது பெற்றோர் ஏற்படுத்தி இருந்தால் அது அவருக்கு எதிர்காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் தீங்கு விளைவிக்கும். இதில் முதன்மையான ஒன்று வலுவான உறவுகளை நம்புவதற்கு அல்லது உருவாக்குவதற்கு அவர்களுக்கு ஏற்படும் இயலாமை. அதே போல ஒருவர் குழந்தை பருவத்தில் சந்தித்த அதிர்ச்சி நிகழ்கால நிராகரிப்பால் தூண்டப்படலாம்.
குறைந்த சுயமரியாதை.. குறைந்த சுயமரியாதை என்பது ஒருவருக்கு அவர்கள் யார், அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது. இவர்கள் பெரும்பாலும் தங்களை தாங்களே திறமையற்றவர்கள் என்று உள்ளுக்குள் உணர்கிறார்கள். அனைவருக்குமே சுயமரியாதை போதுமான அளவு இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் மற்றவர்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். பலர் அடிக்கடி நிராகரிப்பை எதிர்கொண்டால் அதற்கு முக்கிய காரணமாக குறைந்த சுயமரியாதை கூட காரணமாக இருக்கலாம். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தேவைப்படும் நம்பிக்கை ஒருவருக்கு இல்லாத போது, மற்றவர்கள் அவர்களை முன்னேற விடாமல் கீழே இழுக்கவும், அவர்கள் வாய்ப்புகளை தட்டி பறிக்கவும் அவர்களே அனுமதிக்கிறார்கள்.
எதிர்மறை எண்ணங்கள் : ஒரு சிலருக்கு இயற்கையிலேயே குழந்தைப் பருவத்திலிருந்தே எதையுமே நெகட்டிவாக பார்க்கும் எண்ணம் இருக்கும். அபப்டி எதிர்மறை நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்கள் அவர்கள் மனதில் பதிந்து விட்டால் உறவுகளிலும் தொழிலிலும் வெற்றிகரமான நிலைப்பாட்டை அடைய உதவும் நேர்மறை மனநிலையை நாடும் பழக்கம் அவர்களிடம் கொஞ்சமும் இருக்காது. மனதில் எதிர்மறை விஷயங்கள் மேலோங்கி இருந்தால், அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதையோ அல்லது அன்பாக நடந்து கொள்வதையோ நிறுத்திவிடுகிறார்கள். இதனால் ஒருகட்டத்தில் அவர்கள் நிராகரிக்கபடுகிறார்கள்.
பர்சனாலிட்டி டிஸார்டர் : ஆளுமைக் கோளாறு எனப்படும் பர்சனாலிட்டி டிஸார்டர் கொண்ட நபர் கடினமான மற்றும் ஆரோக்கியமற்ற சிந்தனை, செயல்பாடு மற்றும் நடத்தை ஆகியவற்றை கொண்டிருப்பார். ஆளுமைக் கோளாறு உள்ள ஒருவருக்கு சூழ்நிலைகள் மற்றும் நபர்களை உணர்ந்து தொடர்புகொள்வதில் சிக்கல் காணப்படும். இதனால் மற்றவர்கள் அவர்களின் நடத்தை வழக்கத்திற்கு மாறானதாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருப்பதாக பார்க்க கூடும், எனவே அவர்கள் உங்களைத் தங்கள் வட்டத்திற்குள் சேர்த்து கொள்ளாமல் நிராகரித்து விடுவார்கள்.