ஊதியத்திற்கு வேலை பார்க்கும் அனைவரும் ஒருகட்டத்தில் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். ஆனால் நாளடைவில் பணியிடத்தில் மகிழ்ச்சியின்றி, உற்சாக குறைவுடன் கடமையே என்று வேலையே தொடர்வார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கட்கிழமை காலை வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலே பலருக்கு தலைவலி, பீதி அல்லது தேவையற்ற டென்ஷன் ஏற்படும். தாங்கள் கனவு கண்ட வேலையே கிடைத்தாலும் கூட பலரும் இந்த சிக்கலை எதிர்கொள்வார்கள். நீங்களும் இவர்களில் ஒருவரா.! வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
உங்கள் பாஸ் : உங்கள் உயரதிகாரி அல்லது முதலாளிக்கும் உங்களுக்கு ஒத்து போகவில்லை என்றால் அது நீங்கள் உங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாததற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். உங்கள் பாஸ் என்ன சொல்வாரோ, அடுத்து என்ன திட்டப்போகிறாரோ என்று பதட்டத்துடன் இருப்பது உங்களுக்கு பிடித்த வேலையை கூட நீங்கள் ரசித்து மகிழ்ச்சியுடன் செய்வது கடினமாகிறது.
சக ஊழியர்கள் : மாணவர்கள் எப்படி பெற்றோர்களுடன் நேரம் அதிகம் செலவிடுவதை விட பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் அதிகம் இருக்கிறார்களோ, அதே போல நாம் நமது குடும்ப உறுப்பினர்களை விட சக ஊழியர்களுடன் அதிக நேரம்செலவிடுகிறோம். எனவே சக ஊழியர்களுடனான உறவு நட்பாக இல்லாவிட்டால் பணியிடத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கடினமே.
பிடிக்காத வேலை : நம்மில் பலர் பிடித்த வேலையே செய்வதை விட பணம் சம்பாதிப்பதற்காக கிடைத்த அல்லது பிடிக்காத வேலையே செய்யும் சூழலில் தான் இருக்கிறோம். பிடிக்காத அல்லது ஆர்வமில்லாத வேலையே செய்வதால் வாழ்க்கையை ஓட்ட பணம் கிடைக்கும் என்றாலும், கிடைக்கும் பணத்தால் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியை வாங்க முடியாது.
நீண்ட தூர பயணம் : பொதுவாக வீட்டிற்கும் - அலுவலகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ஓரளவு பயணம் செய்ய கூடியதாக இருந்தால் சோர்வோ, அலுப்போ இருக்காது. ஆனால் வேலைக்குச் செல்வதற்கு நீண்ட நேரம் பயணம் செய்வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பலர் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்ல ஒன்றரை மணி நேரம், இரண்டரை மணி நேரம் என்று ட்ராவல் செய்கிறார்கள். காலையும், மாலையும் சுமார் 4 முதல் 5 மணி நேரம் பயணத்திற்காக மட்டுமே செலவிடுவது உங்கள் பணியிடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் போவதற்கான காரணமாக இருக்கலாம்.
அதிக வேலை : பணியிடத்தில் நீங்கள் அதிக சுமை மற்றும் அதிக வேலை செய்ய நேரிடும் போது ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக அதீத சோர்வு ஏற்படலாம். நீங்கள் அதிக வேலைப்பளுவை சமாளிக்க கூடியவர் என்றால் நிலைமையை கடந்து செல்ல முடியும். ஆனால் கடினமாக உழைக்க விரும்பவில்லை என்றால் நிச்சயம் பணியிடத்தில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
நிறுவனத்தின் குறிக்கோள் : நீங்கள் உங்கள் வேலையை ரசித்து செய்தாலும், உங்கள் டீமை நேசித்தாலும் கூட சில நேரங்களில் உங்கள் நிறுவனத்தின் குறிக்கோள் உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்காது. உங்கள் நிறுவனம் செயல்படும் நோக்கம் அல்லது குறிக்கோள் உங்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தால் பணியிடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்.