பொழுதுபோக்கு, திரைப்படங்கள், வெப் சீரிஸ், இசை, என்று வரும்போது ஒரு சில நாடுகள் உலக அரங்கில் தனித்துவம் பெற்றுள்ளார்கள். அதில் குறிப்பாக, கொரிய நாட்டின் K-பாப் என்றாலும் சரி, வித்தியாசமான கொரியத் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களாக இருந்தாலும் சரி உலகம் முழுவதும் பல இடங்களில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, இந்தியர்கள் கொரிய டிராமாகளை விரும்பி பார்க்கிறார்கள்! இதற்கு என்ன காரணம்?
கொரியர்கள் அவர்களின் டிராமா, சீரிஸ்களை விரும்பிப் பார்க்கிறார்களோ இல்லையோ, இந்தியாவில் அதற்கான வரவேற்பு மிக மிக ஆதிகம். உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற BTS என்ற k-pop அடுத்தபடியாக, கொரிய டிராமாக்களை இந்தியா முழுவதும் விரும்பிப் பார்க்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினரையும் கொரிய சீரிஸ்கள் கவர்ந்துள்ளன. நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா கொரிய டிரமாக்களை விரும்பிப் பார்ப்பார்களாம். அது மட்டுமல்ல, நாகாலாந்து மினிஸ்டர் தெம்ஜேன் இம்னா தினமும் கொரிய டிராமாவை பார்க்காமல் தூங்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரையும் வசியம் செய்து வைத்தது போல இதில் அப்படி என்ன ஸ்பெஷல் உள்ளது, என்பது பற்றி தொழில்முனைவோர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான அங்கித் ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.திரைப்படங்களில் நடிக்கும் பிரபல நட்சத்திரங்கள் கொரியாவில் எடுக்கப்படும் நாடங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் விஜய் உள்ளிட்டவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி சீரியலில் நடித்தால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் கொரியாவில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள், முன்னணி நட்சத்திரங்கள் டிராமாக்களில் நடிக்கிறார்கள்.
பொதுவாக ஒரு நாடகம் அல்லது வெப் சீரிஸ் மிகவும் பிடித்திருக்கிறது என்றால் அதில் கதையம்சம் நன்றாக இருக்க வேண்டும். அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். நானும் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்று அப்படியே கேமராவில் நின்று போக முடியாது. இந்தியாவில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முன்னணி கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே கதை ஓட்டத்தில் முக்கியத்துவமும். எஞ்சியுள்ள பலரும் பொம்மை போல வந்து போவதுமாகத்தான் இருக்கிறது. கதையில் நாயகன் நாயகி மற்றும் முன்னணி கதாப்பாத்திரங்கள் என்று ஒரு சில பாத்திரங்கள் தான் இருக்கும், கதையோட்டம் அவர்களைப் பற்றி மட்டுமே இருக்கும்.
ஆனால், முன்னணி பாத்திரங்கள் அல்லாதவர்களுக்கும் கூட, கொரிய நாடகங்களில், கதை ஓட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது நாடகத்தில் நடிக்கும் அனைவருமே முக்கியமான பாத்திரமாகத்தான் இருப்பார்கள்.கொரிய நாடகங்களை மக்கள் விரும்பி பார்ப்பதற்கும் மற்றொரு முக்கியமான காரணமாக கதைக்களம் பரபரப்பாக இருக்கும், ஜவ்வு மாதிரி திரைக்கதை இழுவையாக இருக்காது. இங்கு மூன்று அல்லது நான்கு எபிசோடுகளில் காண்பிக்கப்படும் காட்சிகள், அங்கே ஒரே எபிசோடிலேயே முடிந்துவிடும். இதனால் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அது மட்டுமல்லாமல், கதாபாத்திரங்கள் அணிந்து வரும் ஆடைகள் புதுமையாகவும், பின்னணி இசை ஈர்க்கும்படியாகவும் இருக்கின்றது.
மேலே கூறிய கூறியுள்ள காரணங்களை தவிர்த்து மற்றொரு முக்கிய காரணத்தால் தான் கொரிய நாடகங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்! கொரிய நாடகங்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்கள் கூட, வயது மற்றும் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை பிரதிபலிப்பது போலத்தான் இருக்கும். லேசான மிகைப்படுத்தல் இருந்தாலுமே, பெரும்பாலும் பார்வையாளர்களுடன் பொருந்தும். இங்கே எடுக்கப்படும் திரைப்படங்கள், சீரிஸ்கள், நாடகங்கள் என்று எதுவுமே இளம்தலைமுறையினரை பிரதிபலிப்பது போல இல்லை, நடக்காததை மிகைப்படுத்தி, நடைமுறையில் இல்லாத விஷயங்களை கூறுவது போலத்தான் இருக்கிறது.
மேலும் கொரிய டிராமாக்களில் காட்டப்படும் வயதான கதாபாத்திரங்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் எந்த விதமான சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் கண்முன் நடப்பது போல இருக்கும். இது அனைவருக்குமே பொருந்தக்கூடியதாகவும் இருக்கும். எனவே நம் வாழ்க்கையோடு ஒத்துப் போகக்கூடிய விஷயங்களை காண்பிக்கப்படுவதால் கொரிய டிராமாக்களை பலரும் விரும்புகிறார்கள்.