பிறந்த ஒரு குழந்தையின் சாதாரண எடை 2.5 முதல் 3.5 கிலோ வரை இருக்கும். 3.5 கிலோவுக்கு மேலாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் 2.5 கிலோவுக்கு குறைவாக இருந்தால், குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பது அவசியம் ஆகும். ஒரு குழந்தை குறைந்த எடையுடன் பிறப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு பரம்பரை, உயர் ரத்த அழுத்தம் போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் பயன்பாடு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு கூட காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
கர்ப்பத்தின் 37வது வாரத்திற்கு முன் பிறந்த குழந்தைகளை ஒரு பிரிவாக பிரிக்கலாம். இவர்கள் முன்கூட்டியே பிறந்ததால், இந்த குழந்தைகளின் வளர்ச்சி முழுமை அடையாமல் இருக்கும். இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இது குழந்தைக்கு சத்தான உணவு ஆகும் மற்ற உணவு வகைகளை காட்டிலும், தாய்ப்பால் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
மேலும் ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் இடையே குழந்தைக்கு உணவளிப்பது அவசியம். தாய்ப்பால் குழந்தையின் ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக திகழ்வதால், நீங்கள் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எடை குறைந்த குழந்தைக்கு சத்துக்கள் அதிகளவில் தேவைப்படுவதால், அடிக்கடி குழந்தைக்கு தாய்ப்பால் தருவது அவசியம் ஆகும்.
புரதம், கால்சியம், இரும்புச் சத்து கிடைப்பதும் அவசியம் என்பதால், பார்லி, பெருஞ்சீரகம், வெந்தய விதைகள், இலை காய்கறிகள், ஓட்ஸ், பப்பாளி போன்றவைகளை தாய்மார்கள் தங்களது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், குழந்தைகள் இருக்கும் இடத்தை அடிக்கடி சுத்தப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். யாரையும் அருகில் அனுமதிக்க வேண்டாம்.
குறிப்பாக சளி,இருமல் போன்ற நோய் உள்ளவர்களையும் குழந்தை அருகே அனுமதிக்காதீர்கள். எண்ணெய் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இது குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் சுவாச விகிதத்தை ஒழுங்குபடுத்துகிறது. நல்ல தூக்கத்தையும் ஊக்குவிக்கிறது. உங்கள் குழந்தை உடல் எடையை அதிகரிக்கவில்லை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.