கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மிக அற்புதமான கட்டமாகும். தன்னுள் ஒரு புது உயிர் வளர்வதை உணரும் ஒவ்வொரு பெண்ணும் சத்தான ஆகாரத்தை எடுத்துக்கொண்டு தம்மை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள். சத்தான உணவு, சரியான தூக்கம், நடைப்பயிற்சி என அனைத்தையும் மேற்கொண்டாலும் தாயின் மனநலமும் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? கர்ப்பம், பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் தொழில்முறை டூலா மற்றும் பாலுட்டுதல் ஆதரவு நிபுணர் சனம் மோட்வானியிடம் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணல் மூலம் கிடைத்த முக்கிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
கர்ப்ப காலத்தில் டூலா உடன் இருப்பது முக்கியமா? ஒரு டூலா புதிய தாய்க்கு பிரசவத்தின் முந்தைய மற்றும் பிந்தைய வகுப்புகள் மூலமாக கர்ப்பம், பிரசவம், குழந்தை பிறப்பு, தாய்ப்பால் புகட்டுவது போன்ற விஷயங்களை விரிவாக கற்றுக்கொடுக்கிறார். பிரசவ செயல்முறையைப் புரிந்துகொண்டு, நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக நம்பக்கூடிய ஒருவர் உங்களுடன் இருக்கிறார் என்பதை அறிவது, புதிய தாய்க்கு மிகவும் ஆறுதலளிக்கிறது. டூலாவின் ஆதரவுடன், பிறப்பு செயல்முறையின் அனைத்து ஏற்ற தாழ்வுகள், நன்மை தீமைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு நன்கு அறிந்திருக்க முடியும் என்கிறார் சனம் மோட்வானி.
டூலாவை வாடகைக்கு அமர்த்த சரியான நேரம் எது? பிரசவத்திற்கு முந்தைய வகுப்புகளை 8 வாரத்திற்கு முன்பே தொடங்க வேண்டும். இந்த வகுப்புகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து, கர்ப்ப கால வயிற்றின் வளர்ச்சி, மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுக்கிறது. கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட முதல் மூன்று மாதத்திற்குள் டூலா சேவைக்கு பதிவு செய்வது நல்லது.
அனுபவம் வாய்ந்த பெற்றொருக்கும் டூலா சேவை தேவையா? முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்குமான பிரசவ அனுபவம் என்பது தனித்துவமானது. முதல் குழந்தை பெற்ற பெண்ணுடன் ஒரு டூலா இருப்பது, அவருக்கு மேலும் நேர்மறையான எண்ணத்தை வளர்க்க உதவுகிறது. டூலாவை பணியமர்த்திய பல கர்ப்பிணி பெண்களுக்கும் முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தாலும், இரண்டாவது பிரசவம் சுகப்பிரசவமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வாட்டர் பர்த் என்றால் என்ன? வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவ முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது வாட்டர் பர்த் என அழைக்கப்படுகிறது. அன்பு, அமைதி, நேர்மறை எண்ணங்கள் ஆகியன பிரசவிக்கும் தாய்மார்களின் முக்கிய நோக்கமாக உள்ளன. அதனைப் பெற வாட்டர் பர்த் முறை சிறந்தது என சனம் மோட்வானி தெரிவிக்கிறார். மேலும் இதை வெறும் பேஷன் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அதில் உள்ள நன்மைக்காக பலராலும் விரும்பப்படுவதாக சனம் தெரிவிக்கிறார்.
வாட்டர் பர்த் நன்மைகள் என்னென்ன? தாயின் கர்ப்பபைக்குள் குழந்தை அம்னோடிக் என்ற திரவத்தில் வாழ்கிறது, எனவே தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிக்குள் பிறப்பது குழந்தைக்கு மென்மையான அனுபவத்திற்கான வாய்ப்பை அளிக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் நிறைந்த பிரசவ அறைக்குள் பிறந்த குழந்தையை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதை விட, பிறந்த மறுகணமே குழந்தையை அதன் தாய் மார்போடு அணைத்து வைக்க உதவும் தண்ணீர் தொட்டி பிரசவ முறை சிறப்பானது என்பதே நிபுணரின் கருத்தாக உள்ளது.
அனைத்து வயது பெண்களுக்கும் வாட்டர் பர்த் பரிந்துரைக்கப்படுமா? குறைந்த அளவிலான பிரசவ ஆபத்து உள்ள அனைத்து வயது பெண்களுமே வாட்டர் பர்த் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் டூலா சனம் மோட்வானி. கர்ப்பத்தினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு மருத்துவ சப்போர்ட் தேவை என்பதால் அவர்களுக்கு வாட்டர் பர்த் முறை சிறந்தது அல்ல.