புரிந்துகொள்ளக் கூடிய பக்குவம் என்பதும், மழலையிலிருந்து சற்று விலகி நிற்கும் குணங்களும் இந்த 13 வயதைக் கடந்த பின்புதான் நடக்கிறது. அதில் உடல் மாற்றங்கள் மட்டுமன்றி சமூகத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இருக்கிறது. அப்படி பெற்றோர் எந்தெந்த விஷயங்களில் பெண் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும், பக்குவப்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல : பெண் குழந்தைகளுக்கு தைரியத்தை அளிக்க முதலில் கற்றுத்தர வேண்டிய விஷயம் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல பெண்கள் என்பதுதான். ஆணுக்கு என்ன உரிமைகள், வாய்ப்புகள் இருக்கின்றனவோ அவை பெண்களுக்கும் உண்டு என்பதையும், இரு பாலினத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது , மரியாதை ,தகுதிகள் என்ன என்பதையும் புரிய வையுங்கள்.
பேசுவதுதான் முதல் உரிமை : நம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனில் பேசுவதுதான் தைரியத்தின் முதல் படி என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அது நம் வீடுகளிலிருந்து துவங்க வேண்டும். எனவே என்ன நினைக்கிறாய், என்ன விரும்புகிறாய் என்பதை வெளிப்படையாகப் பேசி பெற்றுக்கொள்வதே அவசியம். ஆனால் அது நேர்மையானதாக இருக்க வேண்டும். அதை முறைப்படி கேட்க வேண்டும். கடுமையான வார்த்தைகள் இல்லாமல் தன்மையான வார்த்தைகளால் பேச வேண்டும் என்பதையும் புரிய வையுங்கள்.
முடியாது என்பதில் தயக்கம் வேண்டாம் : வளர்ச்சி, மாற்றங்கள் என்பது உடலளவில் மட்டுமல்ல. அவர்களுக்கான தனிப்பட்ட விஷயங்கள் என்பதும் அப்போதுதான் துவங்குகிறது. எனவே அதை அவர்கள் சரியாகக் கையாளவும், சமூகத்தை எதிர்கொள்ள துணிவு வேண்டும் எனில் முடியாது என்பதை ஆணித்தனமாக சொல்லக் கற்றுக்கொடுங்கள். எந்த இடத்தில் அவர்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள், பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள், இதுவரை இல்லாத உணர்வாக இருக்கிறது..அது பிடிக்கவில்லை எனில் முடியாது..வேண்டாம் என்பதை இப்போதிலிருந்தே சொல்லக் கற்றுக்கொடுங்கள்.
பருவடைதலும் சாதாரணமே : இந்த வயதில்தான் பருவமடைதல், உடல் மாற்றங்கள் நிகழும். எனவே இது தடைகளுக்கானது அல்ல. உன்னை வலிமைப்படுத்தவும், உறுதிபடுத்துவுமே இந்த மாற்றங்கள் என்பதை உணர்த்துங்கள். பருவமடைதல், உதிரப்போக்கு, அதனால் ஏற்படும் சிரமங்கள், சுகாதாரம் என அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது இதுதான்.
எதுவானாலும் தயங்காதே : பதின் பருவத்தின் போது பல சந்தேகங்கள் எழும். அதேசமயம் இந்த வயதில்தான் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து விலக ஆரம்பிப்பார்கள். இதை கேட்கலாமா என்ற பயம் , தயக்கமும் இருக்கும். எனவே அப்படியில்லாமல் எந்த சந்தேகம் , கேள்விகள் இருந்தாலும் பயமில்லாமல் , தயங்காமல் கேட்கலாம். நான் உனக்கு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். என்னுடைய விருப்பமும் உனக்குக் கற்றுத்தருவதே என மகளின் பயத்தை போக்குங்கள்.
உடல் மற்றும் மன உறுதி : எல்லா நேரங்களிலும் பெற்றோர்கள் உடன் இருக்க முடியாது. அந்த நேரத்தில் மனதளவிலும், உடலளவிலும் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும், தன்னை தற்காத்துக்கொள்வது எப்படி என்பதையும் கற்றுக்கொடுங்கள். இதற்கு தற்காப்பு பயிற்சிகள் அளியுங்கள். தகாதபடி நடந்துகொண்டாலோ , பேசினாலோ அவர்களிடமிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது, விலகி வருவது என்பது மட்டுமல்லாமல் அதற்கான தைரியத்தை கற்றுத்தருவதும் உங்கள் கடமையே.