ஒரு குழந்தையின் எதிர்கால மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்கு அவர்களிடம் இருக்கும் நம்பிக்கை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.தன்னம்பிக்கையுடன் வளரும் குழந்தைகள் அழுத்தம், பொறுப்பு, ஏமாற்றங்கள், சவால்கள் மற்றும் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளை சமாளிப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். வாழ்வில் எதிர்வரும் இன்பம், துன்பம் என எந்த சூழலையும் எதிர்கொள்ள குழந்தைகள் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வெற்றியை அனுபவிப்பதன் மூலமும் தோல்வியை சந்தித்தாலும் அதில் இருந்து மீள்வதன் மூலமும் குழந்தைகள் சிறப்பான தன்னம்பிக்கையை வளர்த்து கொள்கிறார்கள்.
சமுதாயத்தின் எதிர்கால தூண்கள் என்று கருதப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கையை வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. ஏனென்றால் சில குழந்தைகளுக்கு வாழ்வில் நம்பிக்கையுடன் இருக்க கூடுதல் உந்துதல் தேவை. எனவே நம்பிக்கை கொண்டவர்களாக குழந்தைகளை வளர்க்க பெற்றோரது அதிக கவனம், கூடுதல் முயற்சி அவசியம்.
படிப்படியான செயல்முறை : ஒரு குழந்தையிடம் நம்பிக்கையை வளர்ப்பது என்பது படிப்படியான செயல்முறை. நீ செயல்களை சிறப்பாக செய்கிறாய் அல்லது நீ தான் பெஸ்ட் என்று கூறுவதால் மட்டுமே ஒரு குழந்தைக்கு நம்பிக்கை வளராது. மாறாக நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெற்றோர் அவ்வப்போது தங்களால் ஆன முயற்சிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களைப் புகழ்வதால் அல்ல, மாறாக அவர்களின் சொந்த சாதனைகளால் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
வீரமிக்க கதைகளை சொல்லுங்கள் : குழந்தைகளிடம் துணிச்சல் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்த கதைகளை விட சிறந்த ஒரு இல்லை. தினசரி தன்னம்பிக்கை மற்றும் வீரம் நிறைந்த நாட்டுப்புறக் கதைகள், சாகச கதைகள் என ஏதேனும் ஒன்றை அவர்களுக்கு சொல்லி உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகளை பொறுத்த வரை நாம் சொல்லும் கதைகள் அவர்களை தனி உலகத்திற்கு கொண்டு செல்லும். இதன் மூலம் எப்படி நம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்வது என்பதை கற்று கொள்வார்கள்.
நம்பிக்கையின் முக்கியத்துவம் : தன்னம்பிக்கை என்பது சுய பலத்தின் பிரதிபலிப்பே தவிர ஒருவரை வெல்லும் வழிமுறை அல்ல. இது ஒரு தனிநபரின் அந்தஸ்தை குறிப்பதில்லை என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் சில நேரங்களில் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது ஒரு பண்பாக நம்பிக்கையை உணர்கிறார்கள். மற்ற குழந்தைகளை விட தன்னை உயர்ந்தவராக காட்டி கொள்ள நேர்மையற்ற வழிமுறைகளை குழந்தைகள் பின்பற்றினால், உங்களது நம்பிக்கை வளர்க்கும் முயற்சி திசை மாறி உள்ளது என்பதை உணர வேண்டும். நம்பிக்கையின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு பிரியா வைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படுகிறது.
அதிகப்படியான பாராட்டு தேவையற்றது : உங்கள் குழந்தையின் சாதனைகளை நீங்கள் பாராட்டாமல் வேறு யார் பாராட்டுவது.? ஆனால் அதற்கும் ஒரு எல்லை வைத்து கொள்ளுங்கள். அளவுக்கு அதிமான உங்கள் பாராட்டு அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதில் அவர்களுக்குள் திமிரான அணுகுமுறையை ஏற்படுத்தி விட கூடும். எனவே அவர்களை ஊக்கப்படுத்தும் அதே நேரம் மிகையான பாராட்டுகளை தெரிவிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை: போட்டியாக இருந்தாலும் கூட எதிராளியை பற்றி பாசிட்டிவாக பேசுவது, எப்போதும் பலத்தை பற்றி மட்டுமே பேசாமல் பலவீனங்களை பற்றியும் விவாதிப்பது, விவாதத்தில் அவர்களின் கருத்து சரியாக இருந்தால் பாராட்டுவது, நிதியை எப்படி கையாளுவது என்று கற்று கொடுப்பது, கருணை மற்றும் இரக்க குணத்தை கற்பிப்பது, குழந்தைகள் முன் பிறரை கடுமையாக விமர்சனம் செய்யாமல் இருப்பது, நன்கொடை மற்றும் தானம் உள்ளிட்ட நல்ல பழக்கங்களை கற்று கொடுப்பது உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் பின்பற்றலாம்.