குழந்தைகளின் டயப்பர்கள் முதல் பொம்மைகள் மற்றும் கிரீம்கள் வரை அனைத்து பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். எனினும் அவற்றை வாங்கி பயன்படுத்துவதை நம்மால் நிறுத்த முடியாது. உங்கள் குழந்தையை வளர்க்கும் போது நீங்கள் சுற்றுச்சூழல் உணர்வுடன் இருக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதுமானது. அது என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்கள் :பொதுவாக சமீப காலமாக குழந்தைகளுக்கு நிறைய டயப்பர்கள் மற்றும் வைப்ஸ் எனும் ஈரமான துடைப்பான்களைப் பயன்படுத்துகிறார்கள், இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை. இதனை ஒரு முறை பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்பதால் தினமும் எண்ணற்ற கழிவுகள் சேர்கிறது. இப்படி அப்புறப்படுத்தப்படும் டயப்பர் மற்றும் வைப்ஸ் மண்ணில் சிதைவதற்கு நீண்ட காலம் எடுக்கும். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே உங்கள் தேவைக்கேற்ப துணி அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
அதிக பொருட்கள் வேண்டாமே :குழந்தைகளுக்கு உடைகள், பொம்மைகள் முதல் விளையாட்டு பொருட்கள் என அதிக அளவிலான பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் நாளடைவில் அதாவது குழந்தைகள் வளர வளர வீணாகும் நிலை ஏற்படும். இதனால் இவை வீணாவது மட்டுமின்றி, அதிக பணம் கொடுத்து வாங்கிய பொருட்களை குப்பையில் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. உங்களால் முடிந்தால் குறைவான பொருட்களை வாங்கவும், இது பணத்தை மிச்சப்படுத்தும். அதேபோல உங்களிடம் உள்ள பொருட்கள் நல்ல நிலையில் இருந்தால் அதனை வேறு யாருக்காவது கொடுக்கலாம்.
உங்களால் முடியும் வரை தாய்ப்பால் கொடுங்கள் : உங்கள் குழந்தைக்கு உங்களால் முடிந்தவரை நீங்கள் தாய்ப்பால் கொடுப்பது சுற்றுச்சூழலுக்கு உங்களால் முடிந்த நல்லதை செய்வதற்கான சிறந்த வழியாகும். இது சிறந்த ஊட்டச்சத்து வழங்குவது, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, கடையில் கிடைக்கும் பவுடர்களை தவிர்க்கவும் உதவும். உங்கள் குழந்தை வளர்ந்த பின்னர் நீங்களே குழந்தைக்கு உணவை தயார் செய்யுங்கள். உங்கள் உணவை நீங்களே தயாரிப்பது கூட சிக்கனமானது. கூடுதலாக, உங்கள் குழந்தைக்கு நீங்களே உணவளிப்பது ஆரோக்கியமான விருப்பமாகவும் இருக்கும்.
ஆர்கானிக், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் பயன்படுத்தவும் : உங்கள் குழந்தைக்கு நீங்கள் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதிகப்படியான இரசாயனங்கள் கொண்ட தயாரிப்புகளைத் தவிர்த்து, இயற்கையான மற்றும் பாதுகாப்பான தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். இது உங்கள் குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதேநேரத்தில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும் இருக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து விடுங்கள் : உங்கள் குழந்தைகளிடம் விளையாட நிறைய பொம்மைகள் இருக்கும், இவைகள் அனைத்தும் சில நாட்களுக்கு பின்னர் குப்பையில் வீசப்படும் இந்த பொம்மைகளில் பெரும்பாலானவை பிளாஸ்டிக்கால் ஆனவை என்பதால் இது சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகள் வீட்டில் கிடைக்கும் வழக்கமான பொருட்களுடன் விளையாட உதவுங்கள், அல்லது கைவினைப் பொருட்கள் மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட விளையாட்டு ஜமான்களை வாங்கி கொடுத்து விளையாட அனுமதியுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருங்கள் :குழந்தைகள் தங்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை பார்த்து தான் பெரும்பாலான விஷயங்களை கற்று கொள்கிறார்கள். எனவே சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி, நாம் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு குழந்தை இருந்தால், நீங்கள் முன்மாதிரியாக இருப்பதை உறுதிசெய்து, சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை முறையை வாழ அவர்களையும் வழிநடத்துங்கள்.