இன்றைய நவீன காலகட்டத்தில் பல தீய பழக்கங்களை குழந்தைகள் மற்றும் டீனேஜில் இருப்பவர்கள் மிக எளிதாக கற்று கொள்கின்றனர். இந்த சூழலில் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. பெருமபாலும் புகைபிடிக்கும் இளைஞர்கள் தங்களது டீனேஜ் பருவத்திலேயே புகைபிடிக்க கற்று கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
விளையாட்டாக துவங்கும் இந்த தீய பழக்கம் நாளடைவில் கட்டுப்படுத்த முடியாத அன்றாட பழக்கமாக மாறி உயிருக்கே உலை வைக்கிறது. பெற்றோருக்கு எழும் முக்கிய பிரச்சனை புதிய தலைமுறையான தங்களது டீனேஜ் பருவ பிள்ளைகள் புகைப்பழக்கத்தை கற்று கொள்ளாமலோ அல்லது அதை பழகி விட்டால் அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி என்பது பற்றியதாக இருக்கிறது.
குழந்தைகளை பொறுத்தவரை புகை பழக்கம் வேடிக்கையாக துவங்கி பின் பிருகட்டத்தில் அவர்களை அடிமையாக்கி விடுகிறது. புதிய விஷயங்களை முயற்சித்து பார்க்க வேண்டும் என்றார் ஆவல், உடனிருக்கும் நண்பர்களின் தூண்டுதல் உள்ளிட்ட பல காரணங்களால் இளம் பருவத்தினருக்கு புகைப்பழக்கம் ஏற்படலாம். சிகரெட் என்ற வாழ்நாள் போதைக்கு உங்கள் பிள்ளைகள் அடிமையாகாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
விவாதிக்கலாம்.. புகைபிடிக்கும் பழக்கம் பற்றி அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை நட்புடன் பேசி தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு தெரியவில்லை என்றால் புகைப்பழக்கத்தால் புகைப்பவருக்கும், சமுதாயத்திற்கும் என்னவெல்லாம் கேடு என்பது எடுத்து கூறி புரிய வைக்கலாம். புகைபழக்கம் குறித்த குழந்தைகளின் எண்ணங்களை அறிய பெற்றோர்கள் அவர்களிடம் ஆரோக்கியமான விவாதம் செய்வது அவசியம்.
வேண்டாம் என்பதன் முக்கியத்துவம் : குழந்தைகள் டீனேஜை எட்டு போது அவர்கள் உடன் பழகும் பல்வேறு தரப்பு நண்பர்கள் மூலம் ஏராளமான தேவையற்ற பழக்கங்களை கற்று கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே வேண்டாம் என்ற சொல்லில் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் உணர்த்த வேண்டும். உடன் பழகும் நபர்கள் யாராவது உன்னை சிகரெட் பிடிக்க கட்டாயப்படுத்தினால் "மன்னிக்கவும், நான் புகைப்பதில்லை" என்ற வார்த்தையை சொல்லி பழக வேண்டும் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
நிஜ வாழ்க்கை உதாரணங்கள்: நிறைய டீனேஜ் குழந்தைகள் இ-சிகரெட்டுகள், கேன்டி சிகரெட்டுகள், ஹூக்கா போன்ற புகைக்க பயன்படுத்தும் முறை பாதுகாப்பானது, இதை பயன்படுத்துபவர்கள் அருகில் நாம் இருந்தால் கூட நமக்கு ஏதும் நேராது என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களை பின்னாளில் புகைப்பழக்கத்திற்கு இட்டு செல்லும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே நிஜ வாழ்க்கை உதாரணங்களை கூறி, புகைபழக்கத்தால் ஏற்பட கூடிய கொடிய கேன்சர் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடும் உடல்நல பிரச்சனைகளை புரிய வைக்கலாம். இதன் மூலம் புகைபிடிக்கும் மக்கள் அருகில் வந்தால் அவர்கள் அந்த சூழலை தவிர்த்து பாதுகாப்பான இடத்திற்கு நகர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
பண ஒப்பீடு: ஒருவேளை உங்கள் டீனேஜ் பிள்ளை சிகரெட் பிடிக்கிறார் என்றால் அதற்கு ஒரு நாள் ஆகும் செலவு, வார் மற்றும் மாத செலவை அவர்களையே கணக்கிட சொல்லுங்கள். உடலுக்கு தீமை தரும் இப்பழக்கத்திற்காக நீ செய்யும் இந்த செலவை, சேமித்து வைத்தால் உனக்கு தேவையான ஆடைகள் அல்லது ஸ்மார்ட் போன்களை வாங்கி கொள்ளலாமே என்று சுட்டி காட்டுங்கள். எனவே அவர்கள் இதற்கான செலவை குறைத்து அவர்களுக்கு தேவையான பிற அத்தியாவசிய பொருட்களை அல்லது ஆசைப்படும் பொருட்களை வாங்கி கொள்ள துவங்குவார்கள்.
முன்னுதாரணமாக இருக்கலாம் : நீங்கள் ஒருவேளை சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், உங்கள் டீனேஜ் பிள்ளைஇடம் புகைப்பழக்கத்தை பற்றி சொன்னால் எடுபடாது. எனவே உங்கள் பிள்ளையின் கண்முன்னே நீங்கள் புகைப்பழக்கத்தி சிறிது சிறிதாக விட்ட பின், அவர்களுக்கு புகைப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்து கூறலாம். அதனால் தான் நானே புகைப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன், நீ எக்காரணம் கொண்டும் இதை பழகி விடாதே என்று எச்சரிக்கலாம்.