குளிர்காலத்தில் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் அதிகமாக பரவும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிக குளிர் நிலவும் என்பதால் நாம் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் உண்ணும் உணவில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதன்மூலம் குளிர்காலங்களில் பரவும் தொற்றுநோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.
காய்கறிகள் : நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் காய்கறிகளில் உள்ளதால் குளிர்காலங்களில் காய்கறிகளை கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், காய்கறிகளில் ஆன்டிஆக்சிடன்ஸ் நிறைந்துள்ளதால் அத்தகைய உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் போது சளி மற்றும் இருமல், தொற்றுநோய்கள் ஆகியவை நம்மை பாதிக்காது. பிராக்கோலி, பசலைக்கீரை, இஞ்சி, பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவைகளில் ஆன்டிஆக்சிடன்ஸ் அதிகமாக உள்ளது. இரவுநேரங்களில் நீர்சத்து காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால், உறங்கும் நேரங்களில் எளிதாக சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
பழங்கள் : நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக குழந்தைகளுக்கு பழங்களை நாள்தோறும் கொடுக்கலாம். தினம் ஒரு ஆப்பிளை உண்டால், மருத்துவரை அணுக தேவையில்லை என நாம் ஏற்கனவே கேள்விபட்டிருப்போம். அது உண்மையும்கூட. கடந்த 2010ம் ஆண்டு இலினாய்ஸ் (Illinois) பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், ஆப்பிளில் இருக்கும் நார்சத்து நம் உடம்பில் இருக்கும் கோபத்தை தூண்டு செல்களை நோய் எதிர்ப்பு சக்தியுடைய செல்களாக மாற்றும் வல்லமை உடையது என கண்டுபிடித்துள்ளனர். இதனால், குழந்தைகளுக்கு நாள்தோறும் ஒரு ஆப்பிள் கொடுப்பது நல்லது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் விட்டமின் சி ஆப்பிளில் அதிகம் உள்ளது. அவை நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்கும். இதேபோல், ஆரஞ்சு, கொய்யா மற்றும் பேரிக்காய்களிலும் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ஸ் உள்ளது.
பருப்பு வகைகள் : புரதச்சத்து நிறைந்திருக்கும் பருப்பு உணவுகளையும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கலாம். திசுகளை பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலதுக்கு தேவையான சக்தியும் பருப்பு உணவுகளில் அதிகம் உள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம், மக்னீசியம் சத்துக்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். இதனால், குழந்தைகளின் அன்றாட உணவுகளில் பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முளைக்கட்டிய பச்சைப்பயிறு, வேக வைத்த கொள்ளு, சுண்டல் ஆகியவற்றை நாள்தோறும் கொடுக்கலாம்.
முட்டை : ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் முட்டையும் ஒன்று. புரோட்டின், விட்டமின், ஆன்டி ஆக்சிடன்ஸ் நிறைந்திருக்கும் அதேவேளையில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுபொருளான ஜிங்கும் இதில் இருக்கிறது. இதனால், நாம் எடுக்கும் அன்றாட உணவுகளில் முட்டையை முக்கிய உணவாக சேர்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு வேக வைத்த முட்டையை கொடுக்கலாம். நாள்தோறும் முட்டை சாப்பிடுவதால் நம் நோய் எதிர்ப்பு மண்டலதுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
காளான் : குளிர்கால உணவுகளில் காளானையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் மருத்துவக் குணங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதன்மூலம் தொற்றுநோய் மற்றும் அழற்சிகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.காளான்களில் நிறைய வகைகள் உள்ளன. சிப்பிக்காளான், பால் காளான் ஆகியவை உள்ளன. நம் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதில் காளான்கள் பயன்படுகின்றன
மூலிகை பொருட்கள் : நம் சமையலறையில் இருக்கும் சில மூலிகை பொருட்களையும் குளிர்காலத்தில் சமைக்கும் உணவுகளில் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, மஞ்சள்தூள், கிராம்பு, லவங்கபட்டை, மிளகு ஆகியவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் சளி மற்றும் இருமலில் இருந்து விடுபடலாம். இவை கிருமிநாசினியாகவும் இருப்பதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. புளி ரசத்துக்கு பதிலாக மிளகு ரசம் வைக்கலாம், நாள்தோறும் அருந்தும் டீயில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும், உணவே மருந்து என்பதற்கு ஏற்ப நம்மையும், நம் குழந்தைகளையும் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க இத்தகைய இயற்கை உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மேலும், நொறுக்குத் தீனி என்ற பெயரில் பிஸ்கட்ஸ்களை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டாம். இவை ஜீரணமண்டலத்தை பாதிக்கும். எண்ணெய் பலகாரங்களையும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டாம்.