எந்த ஒரு பெற்றோரும் தன்னுடைய குழந்தையை ஒழுக்கமற்றவர்களாகவும் சமுதாயத்தால் வெறுக்க கூடியவனாகவும் வளர்க்க விரும்ப மாட்டார்கள். ஆனால் சில நேரங்களில் பெற்றோர்கள் கொடுக்கும் அதிக சுதந்திரமும் அதிகப்படியான செல்லமும் குழந்தைகளை அப்படி மாற்றி விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் சில விஷயங்கள் குழந்தைகள் கேட்கும் போது அவற்றிற்கு மறுப்பு சொல்லவும் அதற்கான காரணத்தை தெளிவாக அவர்களிடம் கூறி புரிய வைக்கவும் முயல வேண்டும்.
அதற்கு பதிலாக அவர்கள் என்ன கேட்டாலும் செய்து விடுவதும் வாழ்க்கையில் ஏமாற்றங்களே சந்திக்க கூடாது என நினைப்பதும், விரும்பியது அனைத்தையும் கொடுத்து வளர்ப்பதும் அவர்களை சில தவறான செயல்களை செய்ய வைக்கிறது. வாழ்க்கையில் சில காலகட்டங்களில் தாங்கள் விரும்பியது கிடைக்காத போது அது கிடைப்பதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராகிறார்கள். எனவே உங்கள் குழந்தை ஒழுக்கமற்றவனாக வளர்கிறான் என்பதை சில அறிகுறிகள் மற்றும் குணநலன்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அன்பு, இறக்கம், அனுதாபம் ஆகியவற்றை புரிந்து கொள்ளாமல் இருப்பது : அன்பு , இறக்கம் மற்றும் அனுதாபம் ஆகிய குணநலன்களோடு வளரும் குழந்தைகள் அனைவராலும் மதிக்கப்படுவார்கள். மேலும் இப்படிப்பட்ட குழந்தைகள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் அவர்களை காயப்படுத்தாமல் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் உங்கள் குழந்தைகள் இது போல் அல்லாமல் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தங்களைப் பற்றியே அதிகம் நினைத்து கொண்டு, தங்கள் விருப்பத்திற்கே எப்போதும் முன்னிலை கொடுத்து மற்றவரை காயப்படுத்தவும் தயங்காத மனநிலையில் இருந்தால் நீங்கள் அவரை கண்டிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பொருள்.
அதிக உரிமை எடுத்துக் கொள்வது : குழந்தைகளுக்கு சலுகைகள் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதையே ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தாங்கள் நினைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பது அவர்கள் வாழ்க்கையில் பெரிய சங்கடங்களை ஏற்படுத்தலாம். முக்கியமாக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கு யாரை வேண்டுமானாலும் காயப்படுத்தலாம், மரியாதை குறைவாக நடக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தால் கண்டிப்பாக அவர்களை கண்டிக்க வேண்டும்.
எதற்கேனும் மறுப்பு தெரிவித்தால் கடுப்பாகிவிடுகிறார்களா? : செல்லமாக சுதந்திரமாக வலரும் குழந்தைகள் பலருக்கும் தாங்கள் ஏதாவது ஒரு விருப்பத்தை தெரிவிக்கும் போது தங்கள் பெற்றோர் அதனை நிராகரித்தால் மிகுந்த கோபம் வந்துவிடும். அந்த கோபம் பெற்றோரின் மீதும் மற்றவரின் மீதும் கூட திரும்புவதற்கு வாய்ப்பு உண்டு. ஏதேனும் ஒரு விஷயத்திற்கு நீங்கள் இல்லை என்று கூறிய பின் அவர்கள் அதிகப்பிரசங்கித்தனமாகவும், வெறி பிடித்தது போல் நடந்து கொண்டால் நீங்கள் அவரின் மீது அதிக கவனம் எடுத்து அவர்களை சரிபடுத்த வேண்டும்.
அவர்கள் செய்த தவறுக்கு வருந்தாமல் இருப்பது: ஒழுக்கமற்ற குழந்தைகள் எப்போதும் தாங்கள் செய்யும் சில நல்ல விஷயங்களுக்கு கூட வெகுமதியை எதிர்பார்ப்பார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எப்பொழுதாவது தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள் முக்கியமாக அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதற்காக எப்பொழுதும் வருந்துவதே இல்லை. தாங்கள் செய்த தவறினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து தப்பிக்க பார்ப்பார்களே தவிர தவறை திருத்திக் கொள்ள மாட்டார்கள். இந்த குணநலன்கள் உங்கள் குழந்தைக்கு இருந்தால் நீங்கள் அவருக்கு செல்லம் கொடுப்பதை குறைத்து ஒழுக்க நெறிகளோடு வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
மற்றவர்களின் மீது குறை சொல்வது : உங்கள் குழந்தைகள் அதிகபிரசங்கியாக வளர்கிறார்கள் என்பதற்கான முக்கிய அறிகுறி மற்றவர்களின் மீது குறை சொல்வதாகத்தான் இருக்கும். தாங்கள் என்ன தவறு செய்தாலும் எப்படிப்பட்ட பிரச்சனையில் மாட்டிக் கொண்டாலும் அதற்கு மற்றவர்களையே குறை கூறிக் கொண்டிருப்பார்கள். மன்னிப்பு கேட்பதற்கு விரும்பவே மாட்டார்கள். தாங்கள் செய்த தவறுக்கான விளைவுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத குணமுடையதாக உங்கள் குழந்தை இருந்தால் கண்டிப்பாக நீங்கள் செல்லம் கொடுப்பதை குறைத்து திருத்த முயற்சி செய்ய வேண்டும்.