நேரடி வகுப்புகள் நடைபெற்ற போது அதிகாலை அல்லது காலை சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றதால் சுறுசுறுப்பாக இருந்தனர். ஆனால் ஆன்லைன் வகுப்புகளின் போது கதையே வேறு. குழந்தைகள் மீண்டும் வழக்கமான நேரடி வகுப்புகளுக்கு செல்லும் வகையில் அவர்களின் நேர அட்டவணையை ஒழுங்குபடுத்த பெற்றோர்களுக்கு உதவும் வழிகள் பற்றி பார்க்கலாம்..
தற்போது தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வந்தாலும் அதற்கு முன்பு வரை குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு பழக்கப்பட்டிருந்தனர் . தேர்வுகள் முடிந்து சில நாட்கள் மட்டுமே விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருமே மீண்டும் பழைய வழக்கத்திற்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
இரவு நேர ரொட்டீன்
குழந்தைகள் சீரான லைஃப்ஸ்டைலை கொண்டிருக்க சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுவது அவசியம். எனவே இரவு 10 மணிக்கு தூங்கி காலை நேரத்துடன் சீக்கிரம் எழும் தூக்க சுழற்சிக்கு அவர்களை பழக்கபடுத்துங்கள். தூக்கத்தை குலைக்கும் மொபைல், டிவி உள்ளிட்டவற்றை இரவு 8 மணிக்கு மேல் பார்க்க அனுமதிக்காதீர்கள். தூங்க செல்லும் முன் சுத்தமான ஆடைகளை அணிவது, கை மற்றும் கால்களை கழுவி விட்டு படுக்கைக்கு வருவது, புத்தகங்களை படிப்பது போன்ற பயனுள்ள நல்ல விஷயங்களை பழக்கி விடுங்கள்.
காலை நேர ரொட்டீன்
உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக இருக்க, தனது அன்றாட வேலைகளை சோர்வடையாமல் செய்ய நல்ல காலை பழக்கங்கள் மிகவும் முக்கியமானவை. காலை நேரம் பெரியவர்களுக்கே தூக்கத்திலிருந்து எழ சோர்வாக இருக்கும். தினசரி சரியான நேரத்தில் குழந்தைகள் எழ அவர்களையே அலாரம் செட் செய்ய சொல்லி விட்டு, காலை அவர்களையே எழுந்து அணைக்க சொல்வது ஆரோக்கியமான பழக்கத்தை அவர்களிடையே ஏற்படுத்த உதவும். அலாரத்தை ஆஃப் செய்த கையோடு பல் துலக்குதல், முகம் கழுவுதல் மற்றும் காலை கடன் முடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை வரிசையாக செய்ய பழக்க வேண்டும். தவறாமல் பின்பற்றப்படும் இந்த பழக்கம் அவர்களை புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.
8 மணி நேரத் தூக்கம்
தினமும் குழந்தைகள் 8 மணி நேரம் தூங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஏனென்றால் 8 மணி நேர தூக்கம் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். முன்பு சொன்னது போல இரவு நேரத்தோடு படுத்து 8 மணி நேர தூக்கத்திற்கு பின் காலை சீக்கிரம் எழுவது அவர்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
மதியம் தூக்கத்திற்கு நோ சொல்லுங்கள்
மதிய தூக்கம் குழந்தை ஓய்வெடுக்க உதவும் என்றாலும் இப்பழக்கம் குழந்தையின் முழு உயிரியல் கடிகாரத்தையும் சீர்குலைக்கும். பள்ளி செல்லும் போது மதிய வகுப்புகளை கவனிக்க முடியாமல் தூக்கம் தடுக்கும். எனவே மதிய நேரத்தில் விளையாட்டு அல்லது நடனம் போன்ற மன அல்லது உடல் செயல்பாடுகளில் உங்கள் குழந்தையை ஈடுபடுத்துங்கள்.