குழந்தைகள் என்றாலே அதிகம் டிவி பார்க்கக் கூடாது, செல்போன் நோண்டக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை பல வீடுகளில் நாம் பார்த்திருக்க முடியும். ஆனால் உண்மையிலேயே டிவி பார்ப்பது என்பது குழந்தைகளுக்கு பயனுள்ள ஒரு விஷயமாகத்தான் இருக்கும். ஆனால் பல பெற்றோர்கள் இதனை புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. உங்கள் குழந்தைகளை ஏன் நீங்கள் டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பதற்கான முக்கிய ஐந்து காரணங்களை பார்ப்போம்.
விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் : பல்வேறு குழந்தைகளும் டிவி பார்ப்பதன் மூலமாகவே பல விஷயங்களை அறிந்து கொள்கின்றனர். டிவி என்பது அவர்கள் தங்களுடைய அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் இடமாகவும் இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள் என்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக அறிவியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், புவியியல், வரலாறு, பயணம், விளையாட்டுகள், காடுகள், ஆரோக்கியம், ஊட்டச்சத்து, விவசாயம் போன்ற நிகழ்ச்சிகளை அவர்கள் பார்க்கும் போது அவற்றைப் பற்றிய புரிதலும் அறிவும் அவர்களுக்கு உண்டாகக்கூடும். பல மணி நேரம் புத்தகங்களில் படிப்பதை விடவும், சில மணி நேரம் பார்க்கும் இவ்வகையான நிகழ்ச்சிகளின் மூலமே அவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.
தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வார்கள் : இன்று நவீன யுகத்தில் அனைத்துமே தொழில்நுட்பங்கள் தான் என்று நிலைக்கு வந்துவிட்டன. எனவே குழந்தைகளுக்கு தொழில்நுட்பங்களை பற்றிய அறிவு இருப்பதும் அவசியம். கம்பியூட்டர்கள், ஐபேட், இயங்குதளங்கள் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை பற்றியும் டிவி மூலம் குழந்தைகள் தெரிந்துகொள்ள முடியும்.
உலகில் நடக்கும் செய்திகளை பற்றி அறிந்து கொள்ள முடியும் : குழந்தைகள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை மட்டுமல்லாமல், உலகளவில் என்னென்ன விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் பல செய்தி சேனல்களும் டாக்குமெண்டரிகளும் குழந்தைகளின் அறிவை மேம்படுத்த உதவுகின்றன. இதன் மூலம் வெளியுலகை பற்றிய புரிதல்கள் அவர்களுக்கு ஏற்படும்.
சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட உதவுகிறது : தொலைக்காட்சியின் மூலம் இளம் வயதிலேயே சமூகப் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை கட்டமைத்துக் கொள்ள முடியும். டிவி மூலம் பல்வேறு கலாச்சாரங்களையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
குடும்பங்களுக்குள் உள்ள பிணைப்பை வலிமையாக்குகிறது : குடும்பமாக அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து டிவி பார்க்கும் போதும், அனைவருக்கும் பிடித்த ஒரே நிகழ்ச்சிகளை பற்றி பேசிக்கொண்டு இருப்பதும்அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இவை குடும்பங்களுக்கு இடையே உள்ள பிணைப்பை வலிமையாக்குகின்றன. மேலும் மனதிற்கு புத்துணர்ச்சியையும், நல்லதொரு ஆரோக்கியமான உறவுக்கும் இது வழி வகுக்கிறது.