குழந்தை வளர்ப்பில் அனைவருமே வல்லுனர்கள் என்று கூறிவிட முடியாது. அதிலும் முக்கியமாக குழந்தைகள் வளர வளர அவர்களை கையாள்வதும் கட்டுப்படுத்துவதும் பல பெற்றோருக்கு மிகப்பெரும் சவாலாகி விடுகிறது. சில சுட்டிப் பிள்ளைகளை எவ்வளவு முயன்றாலும் கட்டுப்படுத்த முடியாது. அவர்களின் சேட்டைகளை தாங்க முடியாமல் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டி தீர்த்து விடுவார்கள். கோபத்தில் கூறப்படும் இந்த வார்த்தைகள் சில நேரங்களில் குழந்தைகளின் மனதில் மாறாத வடுவாக மாறிவிடும். அந்த வகையில் பெற்றோர்களால் வாய்மொழியாக கூறப்பட்டு குழந்தைகளின் மனதை புண்படுத்தும் விதமாக அமையும் சொற்றொடர்களை இந்த பதிவில் பார்ப்போம்.
உன்னால் ஏன் இதை செய்ய முடியாது? இது இன்றைய காலங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இந்த வாக்கியத்தை பயன்படுத்துவதை பார்க்க முடியும். உங்கள் பிள்ளைகளிடம் ஒரு விஷயத்தை செய்ய சொல்லி வற்புறுத்துவதோ அல்லது அதை செய்ய முடியாத போது “மற்றவர்களால் செய்ய முடிந்த ஒன்றை உன்னால் ஏன் செய்ய முடியாது என்று கூறுவதோ” அவர்களின் திறமையை கேள்வி கேட்பது போல் அமைந்து விடும்.
ஏன்? சாப்பிட மறந்தியா இன்னிக்கு? பிள்ளைகள் ஒரு செயலை செய்வதற்கு மறந்தாலோ அல்லது தவறாக செய்தாலோ பெற்றவர் முதல் ஆசிரியர்கள் வரை இந்த வாக்கியத்தை பயன்படுத்துவார்கள். உண்மையில் இந்த முட்டாள்தனமான வாக்கியத்தை பயன்படுத்துவதன் மூலம் பிள்ளைகளின் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை உணர வேண்டும்.
இதெல்லாம் செய்வதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா! நீங்கள் வாழ்வில் மிகப் பெரும் சவால்களை கடந்து வந்திருக்கலாம். இப்போதும் கூட கடினமான சூழ்நிலைகளை கையாண்டு கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றை உங்கள் குழந்தைகளிடம் சொல்லி காட்டுவது தவறான அணுகுமுறை. அவர்களால் அதனை புரிந்து கொள்ளவோ அவற்றை சரி செய்யவோ முடியாது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.