குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுக்கொடுப்பது என்பதில் பள்ளியிலிருந்து அல்ல வீட்டில் பெற்றோரிடமிருந்து துவங்க வேண்டும். அதுதான் உங்கள் குழந்தையை சமூகத்தில் நல்ல பண்பானவராக காட்டும். அது அவர்களின் வாழ்க்கையை செம்மைபடுத்தும். எனவே நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பண்புகள் என்னென்ன பார்க்கலாம்.
நல்ல வார்த்தைகள் : பேசும் போது நல்ல வார்த்தைகளை பயன்படுத்தக் கற்றுக்கொடுங்கள். தவறான வார்த்தைகள் சமூகத்தில் பார்க்கும் இடங்களில் எல்லாம் கொட்டிக் கிடக்கின்றன. எனவே அதை குழந்தைகள் தெரியாமல் பேசினாலோ அல்லது அப்படி என்றால் என்ன என்று கேள்வி கேட்டாலோ அதன் தவறை சுட்டிக் காட்டுங்கள். இது அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது மற்ற குழந்தைகளோடு பேசுவதற்கு உதவும். வெறும் வார்த்தைகளை மட்டும் பழக்காமல் அதன் அர்த்தத்தையும் கூறுங்கள்.
பயம் வேண்டாம் : யாரும் எதற்கும் பயப்பட தேவையில்லை. தவறு செய்யாத எந்த விஷயத்திற்கும் பயம் தேவையில்லை. நீ செய்த காரியம் சரி எனில், உன் பக்கம் நியாயம், நேர்மை, உண்மை இருப்பின் பயம் அவசியமில்லை என்பதை கற்றுக்கொடுங்கள். அதேபோல் தனிமை பயம், மற்றவர்களை பார்த்து பயம், ஒரு செயலை செய்ய பயம் என இருப்பதும் குழந்தைக்கு மனதளவில் பாதிக்கும். எனவே அதை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள்.
உண்மை : பொய் நிறைந்த உலகம் என்பார்கள். எனவே பொய் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் கீழே தள்ளிவிடும். எனவே பொய் கூறுதல் தவறு என்பதை புரிய வையுங்கள். நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். தவறு செய்தாலும் அப்பா அம்மாவிடம் தைரியமாக உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை வீட்டிலிருந்து துவங்குங்கள். ஏனெனில் சில குழந்தைகள் அம்மா , அப்பா திட்டுவார்களோ என்ற பயத்திலேயே அது பொய் என தெரியாமலேயே பேசுவார்கள். எனவே அதற்கு நீங்கள் இடம் தராதீர்கள். உண்மை வழியைக் கற்றுக்கொடுங்கள்.
நேர்மை : போட்டி நிறைந்த உலகில் குறுக்கு வழிகளுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் அவ்வாறு செல்வது என்றைக்காவது உன்னை கீழே இறக்கிவிடும். அது உனக்கு மன திருப்தியை அளிக்காது. எனவே நேர்மை குணமே நல்ல மனிதனுக்கு அழகு என கற்றுக்கொடுங்கள். எந்த காரியத்தையும் நேர்மையான வழியிலேயே அணுக வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.
சுகாதாரம் : சுகாதாரத்தின் அவசியத்தை கற்றுக்கொடுங்கள். குளித்தல், எழுந்ததும் பல் துலக்குதல், சீக்கிரம் தூங்குதல், உணவை சீராக சாப்பிடுதல், கை கழுவிய பின்னரே எந்த உணவையும் சாப்பிட வேண்டும் என கற்றுக்கொடுத்தல். தூய உடைகளையே அணிதல் என்பன போன்ற சுகாதார ஒழுக்கங்களையும் கற்றுக்கொடுங்கள். இவையே சமூகத்தில் சிறந்த மனிதனாக உயர்த்தும்.