குழந்தைகள் அனைவரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். முக்கியமாக அவர்கள் வளர வளர சிலர் மிகவும் அமைதியாகவும், சிலர் மிக அதிக சேட்டை செய்பவராகவும் இருப்பார்கள். அமைதியாக தனிமையாக இருக்கும் பிள்ளைகளுக்கு நண்பர்கள் உருவாவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். கூச்ச சுபாவத்தினாலும் எப்படி மற்றவரை அணுகுவது என்பது தெரியாத காரணத்தினாலும் அதிகளவு நண்பர்கள் அவர்களுக்கு இல்லாமல் தனிமையாக உணரலாம்.
தனிமை நல்ல விஷயமாக இருந்தாலும் சிறுவயதில் ஏற்படும் தனிமை மனதளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். முக்கியமாக மற்றவர்களிடம் தேவையில்லாத விஷயங்களுக்கும் கூச்சல் போடுவதும் தங்களுக்கு பிடித்த செயல்களையே செய்ய முடியாமல் இருப்பதும் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம். மேலும் தூங்குவதற்கு கூட சிரமப்படலாம். எனவே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பற்றி இப்போது பார்ப்போம்.
அதிக கவனம் செலுத்துங்கள் : பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை மற்றவருடைய பாதுகாப்பில் விட்டு செல்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு செயலாகும். முக்கியமாக 3-4 வயதில் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் அண்மை அதிகமாக தேவைப்படும். அவர்களுக்கு சிறப்பு கவனம் கொடுத்து பாதுகாக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும் அவர்களை கடிந்து கொள்ளாமல் தவறை சுட்டிக்காட்டி அதனை சரி செய்ய உதவி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் தனிமையில் இருந்து வெளியே வர தேவைப்படும் நேரங்களில் அவர்களை பாராட்டி உத்வேகப்படுத்த வேண்டும்.
ஆறுதலாக இருங்கள் : எப்போதும் குழந்தைகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். முக்கியமாக பெற்றோர்களின் ஸ்பரிசம் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான உணர்வை கொடுக்கும். அவ்வபோது அவர்களை கட்டி அணைத்துக் கொள்வது போன்ற பாசம் மிகுந்த செயல்களை செய்யும் போது அவர்கள் மனதளவில் இன்னும் நன்றாக உணர்வார்கள். தேவைப்படும் நேரங்களில் உங்கள் பாசத்தை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும்.
சமுதாயத்துடன் பழகுவதற்கு உதவி செய்ய வேண்டும் : குழந்தைகளை தங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க ஊக்கப்படுத்த வேண்டும். தங்கள் நண்பர்களுக்கு சாக்லேட்டுகள் அல்லது பரிசு பொருட்களை கொடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நீங்கள் உங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தலாம். அவர்களுடைய நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து இருவரையும் ஒன்றாக விளையாடச் செய்வது பேச செய்வது ஆகியவை உங்கள் குழந்தை மற்றவர்களுடன் பழகுவதை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். அவ்வப்போது பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்கிருப்பவர்களுடன் பழகச் செய்யலாம்.
குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள் : குழந்தைகளுக்கு எப்போதுமே தங்கள் பெற்றோர், தங்களோடு நேரம் செலவிடுவது மிகவும் பிடித்தமான ஒன்று. உங்கள் அன்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எல்லாம் நீங்கள் அவர்களோடு பக்கபலமாக இருப்பீர்கள் என்பதை அவர்களுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். பேசுவது முதல் எழுதுவது வரை பல விஷயங்களில் உங்கள் குழந்தைக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த செய்வது அவர்கள் மனதளவில் உறுதியாக மாறவும் தனிமை மனப்பான்மையிலிருந்து வெளியேறவும் உதவியாக இருக்கும்.