பெற்றோர்களை பின்பற்றி தான் குழந்தைகள் இந்த உலகத்தை கற்றுக்கொள்ள தொடங்குகின்றனர். தினசரி நடவடிக்கைகள், குணாதிசய வெளிப்பாடுகள், வெளியுலக நடவடிக்கைகள் என அனைத்துமே பெற்றோரை பின்பற்றித்தான் நடக்கின்றன. அப்படி இருக்கையில் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய திறன்கள் மற்றும் மதிப்புமிக்க குணங்கள் குறித்தும் பெற்றோர்தான் கற்பிக்க வேண்டும்.
அதிலும் பண விவகாரங்களை கையாளுவதுதான் இன்றைக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற பழம்பெரும் பாடல், அப்போதைய காலகட்டத்திற்கு ஒத்துவந்ததோ, இல்லையோ இப்போது கச்சிதமாகப் பொருந்துகிறது. வருகின்ற வருமானம் போதாமல் தடுமாறுகின்ற நிலை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிகம் காணப்படுகிறது. இத்தகைய நிலையில், பணத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்ற சூட்சமம் எல்லோருக்கும் தெரிய வேண்டும்.
வருமானம் என்றால் என்ன ? வருமானம் என்றால் என்ன, அதன் மகத்துவம் என்ன என்பதை உங்கள் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். நினைக்கும் நேரத்தில் எல்லாம் பணம் கிடைத்துவிடும் என்ற மனப்பான்மை குழந்தைகளுக்கு இருக்கக் கூடாது. ஆகவே வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து, அதை வைத்து அனைத்து செலவுகளையும் சமாளித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.
சேமிப்பின் அவசியம் : எந்த சமயத்தில், எந்த செலவுகள் வரும் என்று எல்லா நேரத்திலும் கணித்துவிட முடியாது. தவிர்க்க இயலாத சூழலில் சில அத்தியாவசிய செலவுகளை திடீரென்று செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் சேமிப்பு பணம் மட்டுமே கை கொடுக்கும். ஆகவே, குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமிக்க அறிவுறுத்துங்கள்.
அனுபவங்கள் மூலம் தெரிந்து கொள்ளுதல் : அனுபவமே சிறந்த ஆசான் என்ற பழமொழி எந்த விஷயத்திற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, பண நிர்வாகத்திற்கு கச்சிதமாக பொருந்தும். கடந்த காலத்தில் எப்போதெல்லாம் வீண் செலவு செய்தோம் என்ற அனுபவத்தை குழந்தைகள் கற்றுக் கொள்ளாவிட்டால் அடுத்து வரும் நாட்களிலும் அதே நிலை தொடரும். எனவே, குழந்தைகளுக்கு எவையெல்லாம் நல்ல செலவுகள் அல்ல என்பதை அனுபவங்கள் மூலம் கற்றுத்தர வேண்டும்.
எதார்த்தமான எதிர்பார்ப்புகள் : அளவுக்கு மீறிய ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை கணக்கில் கொள்ளாமல் ஆடம்பரமான பொருட்களை வாங்கவோ, கேளிக்கைகளில் இறங்கவோ கூடாது என்பதை குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். எதார்த்தத்திற்கு அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொண்டால் பின்னாளில் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை குழந்தைகளிடம் புரிய வைக்க வேண்டும்.