உங்கள் குழந்தைகளிடம் எதிர்மறையான சிந்தனைகள் இருக்கிறது என்றால் அதை எளிமையாக புரிந்து கொள்ளலாம். எப்போதும் சக நண்பர்கள், தோழிகள் குறித்து புகார் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒருவித அதிருப்தியான எண்ணம் அவர்களின் மனதை ஆக்கிரமித்து நிற்கும். சுருக்கமாக சொன்னால் முகத்தை தொங்கப்போட்டு வலம் வருவார்கள். யாரிடம் முகம் கொடுத்து பேச மாட்டார்கள்.
கவனத்தை திசை திருப்பலாம் : குழந்தைகளை நீங்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகப்படியாக சேட்டை செய்து கொண்டிருந்தால், அவர்களை கடுமையான முறையில் கண்டிப்பதற்கு பதிலாக அவர்களின் கவனத்தை திசை திருப்பலாம். அமைதியாக இருந்தால் ஐஸ்கிரீம், சாக்கலேட் வாங்கி தருவதாக கூறி சமாதானம் செய்யலாம். தோல்விகளை நினைத்து குழந்தைகள் சோர்ந்து போய் காணப்படும் சமயத்தில், அது வெற்றிக்கான படிக்கட்டாக அமையும் என்று சொல்ல வேண்டும்.
நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்கலாம் : நல்ல சிந்தனையை ஊக்குவிக்கும் விதமாக பழமொழிகள், பொன்மொழிகள் இடம்பெற்ற சுவரொட்டிகளை வீட்டில் ஒட்டி வைக்கலாம். நீதி கதைகளை சொல்லி, அதில் தவறு செய்தவர்கள் யார் என்ற கேள்வியை அவர்களிடமே முன்வைக்கலாம். ஒவ்வொரு கதையிலும் என்ன பாடத்தை கற்றுக் கொள்ள முடியும் என்பதை இறுதியாக எடுத்துக் கூற வேண்டும்.
எதிர்மறை எண்ணப்போக்கை கட்டுப்படுத்துவது : விளையாட்டு போட்டிகளில் ஆர்வமின்மை, படிப்பில் கவனமின்மை என்று எப்போதும், எதையும் கண்டுகொள்ளாமல் முடங்கி கிடக்கும் குழந்தைகளிடம் நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவும், கனிவாக பேசவும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்பிக்கவும் : குழந்தைகள் கோபம் கொள்வது, உணர்ச்சிவசப்படுவது இயல்பானதுதான். அதுபோன்ற சமயங்களில் அமைதியை கடைப்பிடிப்பது எப்படி என்பது குறித்து அவர்களுக்கு நீங்கள் கற்பிக்க வேண்டும். கோபம் வரும் சமயத்தில் பாட்டு பாடுவது, ஓவியம் வரைவது, இசையை ரசிப்பது போன்ற நடவடிக்கைகளை செய்ய ஊக்குவிக்கலாம். சக நண்பர்கள், தோழிகள் மத்தியில் ஒற்றுமையை கடைப்பிடிக்கவும், அன்பை நிலைநாட்டவும் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கலாம்.