வீட்டில் முதல் குழந்தைக்கு அளவில்லாத அன்பு காட்டப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த பிறக்கக் கூடிய குழந்தைகளுக்கு வழிகாட்டியாக, ஒரு தலைமையாக மூத்த குழந்தை தான் இருக்கும். ஆனால், மூத்த குழந்தையாக இருப்பது எப்போதுமே சிறப்பு மிகுந்த விஷயமாக கருத முடியாது. ஏனென்றால், மூத்த குழந்தை என்பதாலேயே சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதாவது, மூத்த குழந்தை என்ற ஒரே காரணத்தால் ஒரு குழந்தையின் குணாதிசயங்களில் பல விதமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். பெற்றோர் அந்த மாற்றங்களை உரிய முறையில் கவனித்து, தீர்வு காண வேண்டும். மூத்த குழந்தையிடம் என்னென்ன மாற்றங்கள் தென்படும், அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
மூத்த குழந்தை சிக்கல் என்றால் என்ன? முதல், முதலாக பிறந்த குழந்தை தான் பெற்றோர், தாத்தா, பாட்டி, மாமா உள்பட அனைத்து உறவுகள் மத்தியிலும் செல்லமாக வலம் வந்து கொண்டிருக்கும். எல்லையற்ற அன்பு, பரிசுபொருட்கள் என மூத்த குழந்தை சகல வசதிகளோடும் வளர்ந்து வரும். ஆனால், அடுத்ததாக இன்னோரு குழந்தை வந்து விட்டால் மூத்த குழந்தைக்கான முக்கியத்துவம் குறையும். இதனால் அந்தக் குழந்தை மனதளவில் பாதிக்கப்படுகிறது.
இதை எப்படி புரிந்து கொள்வது? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மன நல நிபுணரும், தனிநபருக்கான மனநல கல்லூரியை நிறுவியருமான ஆல்ஃபிரட் ஆல்டர் என்பவர் குழந்தைகளின் பிறப்பு வரிசை அடிப்படையில் அவர்களிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். அதேபோல, கெவின் லேமன் என்ற ஆய்வாளர் எழுதியுள்ள புத்தகத்தில், மூத்த குழந்தைகள் எப்படி அவர்களது பெற்றோர்களின் காலடி ஒட்டி நடக்கின்றனர் என்பதையும், அவர்களிடம் நம்பிக்கை எப்படி மேலோங்குகிறது என்பதையும் விவரித்துள்ளார்.
மூத்த குழந்தை பருவ சிக்கலுக்கான அறிகுறிகள் : இங்கு நான் தான் ராஜா / ராணி அல்லது இங்கு நான் தான் எல்லாமே என்ற ஆதிக்க மனப்பான்மை மூத்த குழந்தையிடம் தென்படும். எதிலும் கனக்கச்சிதமான செயல்பாடு இருக்க வேண்டும் என்று குழந்தை எதிர்பார்க்கும். தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். ஆரோக்கியமற்ற போட்டி மனப்பான்மை தென்படும்.
அனைத்து பொறுப்புகளை ஏற்பதால் வரும் நெருக்கடி : மூத்த குழந்தை என்ற வகையில் தேவையற்ற சிக்கல்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி, இன்னோரு குழந்தை வந்த பிறகு, தனக்கு மட்டுமே கிடைத்து வந்த அன்பு, தின்பண்டங்கள், பரிசுபொருட்கள் அனைத்தும் பங்கு பிரிக்கப்படுவதை மூத்த குழந்தையால் ஏற்றுக் கொள்ள இயலாது. இதனால், மன நெருக்கடி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மீது வெறுப்பை காட்டும்.
பெற்றோர் எப்படி தீர்வு காணுவது : இரண்டாவதாக புதிய குழந்தை வந்தவுடன், மூத்த குழந்தையை பெற்றோர் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்துவிடக் கூடாது. குறிப்பாக மூத்த குழந்தைகளின் எதிர்பார்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களை பொறுப்பு மிகுந்த குழந்தையாக வளர்த்தெடுக்கும் அதே சமயம், தேவையற்ற சுமைகளை சுமத்தி விடக் கூடாது.