வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் குறைவின்றி கிடைக்க வேண்டியது அவசியம் ஆகும். உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மற்றும் மன வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்துகள் இன்றியமையாதவை. அந்த வகையில் குழந்தைகளுக்கு தினசரி கிடைக்க வேண்டிய மிக அவசியமான சத்துக்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
மாவுச்சத்து : கார்ப்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து தான் உடல் இயக்கத்திற்கான அடிப்படை ஆற்றலாக இருக்கிறது. கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவற்றை பயன்படுத்தி திசு வளர்ச்சியை ஏற்படுத்தவும், சேதமடைந்த திசுக்களை சீரமைக்கவும் மாவுச்சத்து உதவிகரமாக இருக்கிறது. பிரெட், அரிசி சாதம், உருளைக் கிழங்கு மற்றும் இதர காய்கறிகளில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது.
புரதம் : உடலில் புதிய செல்களின் வளர்ச்சிக்கும், சேதமடைந்த செல்களை சீரமைக்கவும் உதவிகரமாக இருப்பது புரதச்சத்து ஆகும். எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதேபோன்று சரும பாதுகாப்பு மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு இது அவசியமாந்து. இறைச்சி, பால் பொருட்கள், மீன், பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் போன்றவற்றில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
கொழுப்புச்சத்து : மாவுச்சத்தைப் போல, உடலுக்கு ஆற்றல் வழங்க முக்கியத் தேவையாக கொழுப்புச்சத்து இருக்கிறது. உடலுக்குத் தேவையான சில விட்டமின்களை உறிஞ்சிக் கொள்வதற்கு கொழுப்புச் சத்து அவசியமாகும். சரும பாதுகாப்பிற்கும் கொழுப்புச் சத்து பயன்படுகிறது. பால் பொருட்கள், சமையல் எண்ணெய், இறைச்சி மற்றும் நட்ஸ் போன்றவற்றில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளது.
விட்டமின் சி : ரத்த நாளச் சுவர்களை பலப்படுத்தும் வேலையை விட்டமின் சி மேற்கொள்கிறது. உடலில் ஏற்படும் புண்கள் ஆறுவதற்கு காரணமாக இருக்கிறது. அத்துடன் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. சிட்ரஸ் பழங்கள், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், கொய்யா நெல்லிக்காய் போன்றவற்றில் விட்டமின் சத்து உள்ளது.