குழந்தை வளர்ப்பு என்பது நாம் நினைப்பதை விட மிக கடினமான காரியம். முக்கியமாக ஒரு குழந்தையை சரியாக வளர்ப்பதற்கு அளவுக்கு அதிகமான பொறுமையும், அதீத அன்பும் பெற்றோருக்கு அவசியம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். சில குழந்தைகள் எப்போதும் ஓடியாடி விளையாடிக்கொண்டே இருக்கும். ஏதாவது சேட்டை செய்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் கவர்ந்திழுக்கும்படி ஏதாவது செயல்களை செய்து கொண்டிருக்கும்.
ஆனால் அதற்கு நேர் மாறாக சில குழந்தைகள் வளர்ந்த பின்பும் கூட யாரிடமும் பேசாமல் தன்னந்தனியாக “இன்ட்ரோவர்ட்(introvert)” எனப்படும் உள்முக சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை வளர்ப்பதற்கு தனி திறமை வேண்டும். ஒருவேளை உங்கள் குழந்தை உள்மூக சிந்தனையாளராக இருந்தால் அவர்களை எப்படி சரியாக கையாள்வது, அவர்கள் மனதில் உள்ள எண்ணங்களை எப்படி முழுவதுமாக அறிவது என்பதை பற்றி பார்க்கலாம்.
அவர்களை தாழ்வாக நினைக்காதீர்கள் : மற்றவர்களுடன் நன்றாக பழக முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக உள்முக சிந்தனை கொண்ட குழந்தைகளை குறித்து மதிப்பிடாதீர்கள். இன்று வரை பல்வேறு சாதனைகள் செய்த மனிதர்கள் பலரும் உள்முக சிந்தனையாளராக தான் இருந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உள்முக சிந்தனையாளராக இருப்பதற்கே தனி வலிமை என்பதை புரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு ஏற்றபடி உங்களை பக்குவப்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் குழந்தை உள்முக சிந்தனை கொண்டவராக இருப்பதால், அவர்களை வித்தியாசமாக பார்ப்பதும் அல்லது அவர்களை தங்கள் இயல்பிலிருந்து மாறச் சொல்லி வற்புறுத்துவதும் கூடாது. இது போன்ற உள்முக சிந்தனை கொண்ட பிள்ளைகளுக்கு இவ்வாறு இருப்பது இயல்பு தான் என்பதை புரிய வைத்து, நீங்களும் அவர்களோடு சேர்ந்து பயணத்தை தொடருவது இருவருக்குமே நல்லதொரு மனநிலையை கொடுக்கும்.
உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் : உள்முக சிந்தனையாளர்களாக இருக்கும் குழந்தைகள் பலரும் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை தயங்காமல் வெளிப்படுத்துவார்கள். எனவே அவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள அவர்களை மென்மையாக அணுகி, அதன் பிறகு அவர்களாகவே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வரை காத்திருங்கள்..
வற்புறுத்தி எதையும் செய்ய வைக்காதீர்கள் : உள்முக சிந்தனை கொண்ட குழந்தைகள் அனைவரும் இயல்பிலேயே மென்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களின் இயல்புக்கு மாறாக அவர்களை வற்புறுத்தி எதையும் செய்ய வைக்க முயற்சி செய்யும்போது அவை குழந்தைகளை மனரீதியாக பாதிப்படையச் செய்யலாம். எனவே அவர்களை முழுவதுமாக புரிந்து கொண்டு அவர்கள் விரும்புவதை செய்ய அனுமதித்து அதில் ஏதேனும் தவறாக இருப்பதாக கண்டறிந்தால், மென்மையாக தவறை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.