தற்போதைய சூழல் குழந்தைகளுக்கு சரியில்லை என்பதால் கவனமுடன் கையாளுவது அவசியம். கொரோனா ஒரு பக்கம், குளிர்காலத் தொற்றுகள் ஒரு பக்கம் என வாட்டி வதைக்கும் இந்த சூழலில் குழந்தைகளுக்கு கொஞ்சம் சளி பிடித்திருந்தாலும் கவனமுடன் இருப்பது அவசியம். குறிப்பாக அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை சற்றும் குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் நீங்கள் கையாள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
அதேபோல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சளிக்கான தடுப்பூசி போடுவது அவசியம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மருத்துவர் சௌரப் கண்ணா கூறியுள்ளார். இவர் சி.கே.பிர்லா மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கிறார். இந்த தடுப்பூசியானது குழந்தை பிறந்த்ஆறு மாதத்திற்குப் பிறகு கொடுக்க வேண்டும். அதன் பின் தாய்ப்பால் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
குழந்தையை கவனித்துக்கொள்ளும் தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனில் குழந்தையுடனான நேரடித் தொடர்பை தவிர்ப்பது நல்லது. குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதை கட்டாயம் தவிர்க்கவும். நீங்கள் மட்டும் வெளியே செல்வதாக இருந்தாலும் மாஸ்க், கிளவுஸ் அணிவதை மறவாதீர்கள் என்கிறார் மருத்துவர்.