குழந்தைக்கு ஒரு வருடமாவது தாய்ப்பால் கட்டாயம் கொடுத்தால்தான் அதன் எதிர்கால வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் அம்மாகளுக்கு தாய்ப்பால் சரியாக சுராக்காத போது குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதில்லை. அது நமக்கே சில நேரங்களில் தெரியாமல் போகலாம். அதாவது குழந்தை குடிக்கிறதே என நீங்கள் நினைப்பது தவறு. சில நேரங்கள் தாய்ப்பால் போதாமல் குழந்தை வெறும் காம்புகளை உறிஞ்சிக் கொண்டிருக்கலாம். ஆனால் குடித்த சில மணி நேரங்களில் அழத் தொடங்கும். அது ஏன் அழுகிறது என தெரியாமல் சமாதானம் செய்வது பிரயோஜனமில்லை. எனவே குழந்தைக்கு உங்கள் தாய்ப்பால் போதுமானதாக இருக்கிறதா..? சரியான முறையில் குழந்தை பாலை உறிஞ்சுகிறதா என்பதை கண்டறிய சில டிப்ஸ்.
குழந்தை பால் குடிக்க உறியத் தொடங்கியதும் பால் வந்துவிடாது. சில நொடிகள் உறிஞ்சுக் கொண்டே இருந்தால்தான் பால் வரும். அவ்வாறு பால் சுரந்தவுடன் அதன் தாடை அசைவில் மாற்றம் தெரியும். தாடையில் நல்ல அசைவு கொடுக்கும். தொண்டையில் பாலை முழுங்கத் தொடங்கும். சில நேரங்களில் நீண்ட நேரமாக உறிஞ்சியும் பால் வரவில்லை எனில் குழந்தை களைப்பில் அப்படியே தூங்கிவிடும். நீங்களும் குழந்தை பால் குடித்துவிட்டு களைப்பில் தூங்குகிறது என நினைப்பீர்கள். எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அதன் தாடை மற்றும் தொண்டை அசைவை கவனியுங்கள்.
குழந்தை பிறந்த மூன்று வாரங்கள் தாய்ப்பால் அடிக்கடி கொடுப்பீர்கள். அதன் பிறகு மாதங்கள் செல்ல செல்ல குழந்தை பால் குடிக்கும் நேரம் மாறுபடும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, இரண்டு, நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை என வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பசித் தேவை மாறும். இந்த இடைவெளியை கவனித்துக்கொள்ளுங்கள். இந்த இடைவெளி நேரம் மிகக் குறைவாகவே இருக்கிறது எனில் குழந்தை தொடர்ந்து பசியிலேயே இருக்கிறது. வயிறு நிறைவாக பால் குடிக்கவில்லை என்பதே இதன் அர்த்தம்.
தாய்ப்பால் கொடுக்கும் அம்மாகள் குழந்தைக்கு அதிக பால் கொடுத்துவிட்டோமோ என்ற சந்தேகம் ஒரு போதும் வேண்டாம். ஏனெனில் தாய்ப்பால் என்பது குழந்தைகள் உறிந்து சுரக்கச் செய்து குடிப்பதால் போதுமான அளவே குடிக்கும். பசும்பால் கொடுக்கும்போதுதான் நிப்பிள் வழியாக அளவுக்கு அதிகமாக பால் சென்று குழந்தை அதிகம் குடிக்கும் வாய்ப்புகள் உண்டு. அதை சில நேரங்களில் வாந்தியும் எடுத்துவிடும். புட்டிப்பால் குடிக்கும்போது தனக்கு போதும் என்பது கூட தெரியாமல் குழந்தைகள் குடித்துவிடும். ஆனால் தாய்ப்பால் குடிக்கும்போது அவ்வாறு நிகழாது அளவாகவே குடிக்கும்.