குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அவர்களை பள்ளிக்கு அனுப்பலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வது தான் பெற்றோருக்கு மிக கடினமான காரியமாக இருக்கும். ஏனென்றால், உண்மையிலேயே குழந்தை மிகவும் சோர்வடைந்து உடல் நல பாதிப்பு தீவிரமாக இருப்பின் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று நாம் எளிமையாக முடிவு செய்து விடுவோம்.
ஆனால், அதுவே குழந்தைகளுக்கான நோய் அறிகுறிகள் மிதமான அளவில் இருந்தால் அவர்களை அனுப்பலாமா, வேண்டாமா என்று நம் மனதிற்குள் குழப்பம் ஏற்படும். நோயிலிருந்து குழந்தைகள் குணமாகி விட்டாலும் கூட, இப்போது பள்ளிக்கு அனுப்பலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் உங்களை ஆட்கொள்ளும். ஆகவே இந்த விஷயத்திற்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளோம்.
வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டுமா? பள்ளிக்கு செல்ல குழந்தை எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, அவர்களது உடலில் சில நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், அவர்களை பள்ளிக்கு அனுப்புவது சரியல்லை. ஏனென்றால் உங்கள் குழந்தைக்கு உடல் நலம் குணமாகி வந்தாலும் கூட பிறருக்கு அந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் உங்கள் குழந்தை பாடங்களை தவறவிடும் என்று நீங்கள் நினைத்தால், அது குறித்து ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்யலாம்.
கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யவும் ? உங்கள் குழந்தைக்கு மூக்கில் இருந்து நீர் கசிவு, பசி குறைவு, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் உள்ளன என்றால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்தாக வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் அதுகுறித்து உடனடியாக குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் : உங்கள் குழந்தைக்கு மிக அதிகமான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சாப்பிடுவதில் சிரமம், தூக்கமின்மை பிரச்சனைகள், மூச்சு திணறல் போன்ற தீவிரமான அறிகுறிகள் இருப்பின் இவை முற்றிலுமாக குணமாகும் முன்பு உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
எப்போது பள்ளிக்கு அனுப்பலாம்? மருத்துவர் பரிந்துரை செய்தபடி குழந்தைகளுக்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் அனைத்தையும் கொடுத்து வர வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து வகை உடல் தொந்தரவுகளும் முற்றிலுமாக குணமாகிய பின்பு உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்யலாம். அப்போதும் கூட உங்கள் குழந்தைக்கு ஆற்றல் முழுமையாக இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளை நோயிலிருந்து காப்பது எப்படி? தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க முடியும். ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் முன்பாக கைகளை சுத்தமாக சானிடைசர் வைத்து கழுவ கற்றுக் கொடுக்கவும். பள்ளி வகுப்பறையில் உடல் நலம் சரியில்லாத சக நண்பர்களுடன் இணைந்து அமர்வது, அவர்களுடன் உணவுகளை பரிமாறி கொள்வது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.