சிறந்த பெற்றோர்கள் என்பது அவர்களின் குழந்தை வளர்ப்பிலேயே தெரிந்துவிடும். குழந்தையில், அனைத்து பெற்றோர்களும் நல்லொழுக்கத்தையும், நன்னடத்தைகளை பற்றியும் தங்களது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். இருப்பினும், சில விஷயங்களை குழந்தைகள் தாங்களாகவே கற்றுக்கொள்கின்றனர். அதில் ஒன்று தான் பொய் சொல்வது. உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள்.
குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் விதம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிரச்சனைகளைத் தவிர்க்கவும் பொய் சொல்வதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லும் பொய்கள் கூட அழகுதான்.
இருப்பினும், சிறு வயதிலேயே நாம் அவர்களை கண்டிக்கவில்லை என்றால் நாமே நம் குழந்தைகளை தவறு செய்வதற்கு ஊக்குவிக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும். இருப்பினும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொய் சொல்வதில்லை என்று நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவ்வாறு நினைப்பது தவறு. உங்கள் குழந்தை உங்களிடம் பொய் சொன்னால் அதனை கண்டுபிடிக்க சில அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றை குறித்து காண்போம்.
திணறல்: உங்கள் குழந்தை பொதுவாக மிகவும் அமைதியான, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், உரையாடலுக்கு இடையில் அவர்களில் ஏற்படும் திணறல் மூலம் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை உணரலாம். அவர்கள் பொய் சொல்லும்போது அவர்களுக்கு ஒருவித சந்தேகம் இருப்பதால், அதுதான் தடுமாற்றத்தைத் தூண்டுகிறது. குழந்தைகள் பொய் சொல்லும் போது பொதுவாக ஏற்படும் ஒரு அறிகுறியாகும்.