எந்தத் தவறையும் பெற்றோர் வேண்டுமென்றே செய்வதில்லை. சில சமயங்களில் அவர்கள் நல்லதே செய்தாலும் கூட, சுற்றியிருப்பவர்களுக்கு அது குறையாகத் தோன்றும். உதாரணத்திற்கு குழந்தையை கடுமையுடன் கண்டித்தாலும் தப்பு, திறந்த மனதுடன் பேசினாலும் தப்பு, அடித்தாலும் தப்பு, அடிக்காவிட்டாலும் தப்பு என பெற்றோரை பிறர் விமர்சிக்கும் போக்கு மட்டும் மாறவே மாறாது.பெற்றோரின் வளர்ப்பு முறையை கேள்வி கேட்கும் அல்லது குறை சொல்லும் இந்த பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் மற்றும் பெற்றோர் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எந்தவித காரணமும் இல்லாமல் பெற்றோர் விமர்சனத்திற்கு உள்ளாகும்போது, அவர்களது மனம் புண்படுகிறது. இந்த பழக்கத்திற்கு என்றுமே எல்லை கிடையாது என்கின்றனர் நிபுணர்கள்.
எது கிண்டல் என்பதை உணர வேண்டும் : பெற்றோரை கிண்டல் செய்வது உணர்ச்சிகரமானது. அதிக வலி தரக் கூடியது. தான் செய்த குற்றத்திற்காக வருந்துபவர்கள் கூட ஒரு கட்டத்தில் அதை மாற்றிக் கொள்ளவும், அதை மறந்து விடவும் வாய்ப்பு உண்டு. ஆனால், பிள்ளைகளை வளர்க்கும் முறைக்காக விமர்சிக்கப்படுபவர்கள் அதை நினைத்து நீண்ட காலத்திற்கு வருத்தப்படக் கூடும். உங்கள் குழந்தை மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை அவர்களை காயப்படுத்துகிறது அல்லது அவர்களுக்கு அளவுக்கு அதிகமான சுதந்திரம் கொடுக்கிறீர்கள் என்றால், நிச்சயம் அதற்காக பிறர் உங்களை குறை சொல்வார்கள்.
பெற்றோரையும், குழந்தையும் பாதிக்கும் : மக்கள் தாங்கள் அறிவியல் பூர்வமாக நம்பும் ஒரு விஷயத்திற்கு மாற்றான விஷயங்களை பெற்றோர் செய்யும்போது, அது தவறு என கூறி வாதிடுகின்றனர். பெற்றோர் செய்தது தவறு என்று தீர்ப்பு எழுதி விடுகின்றனர். ஆனால், யோசித்துப் பாருங்கள், நீங்கள் குறிப்பிடும் விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றவராக பெற்றோர் இருக்க முடியுமா? நீங்கள் சொல்லும் நன்மைகளை விரும்பாதவர்களா அவர்கள்? இல்லைதானே, ஆனால், உங்கள் விமர்சனங்கள் அவர்களுக்கு தீராத கவலையை ஏற்படுத்தக் கூடும்.
அதிக அக்கறை கொண்டாலும் குற்றமா? இன்றைய நவீன உலகில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை திறன் உள்ளவர்களாக வளர்த்தெடுக்க மிகுந்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எப்படியாவது குழந்தைக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருக்கும். முன்பெல்லாம் குழந்தைக்கு அறிவார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுப்பதில்லை என்றுதான் பெற்றோர் விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால், இன்றைக்கு அதிக அக்கறை செலுத்துவதற்காக விமர்சிக்கப்படுகின்றனர்.
இதை நிறுத்துவது எப்படி? பெற்றோரை விமர்சிக்கும் பழக்கத்தை மற்ற மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். குழந்தையை சிறப்பாக வளர்க்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெற்றோரின் செயலை நீங்கள் விமர்சிக்கும் முன்பாக, அதே இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணருவீர்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக, விமர்சனத்தால் நற்பலன் எதுவும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.