புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆரம்பத்தில் ஒரே நேரத்தில் 1 - 1.5 தேக்கரண்டி தாய்ப்பால் மட்டுமே கொடுக்க முடியும். குழந்தை வளர வளர தான் வயிறும் முழு வளர்ச்சி பெரும் என்பதால் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் நன்கு பால் குடிக்கும் நிலைக்கு வரும். அப்போது அதன் தேவைக்கு ஏற்ப தாய்ப்பால் கொடுக்கலாம். பாட்டில் பால் கொடுப்பவர்கள் சரியான அளவு கொடுத்தாலும் தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் என்பதில் சற்று குழப்பம் இருக்கும். அதுகுறித்து இங்கு காண்போம்.
புதிதாக பிறந்த குழந்தைக்கு முதல் வாரத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 -12 முறையாவது தாய்ப்பால் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் குழந்தைக்கு தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேல் பால் கொடுக்காமல் இருக்க கூடாது. குழந்தை வளரும்போது பால் கொடுப்பதை அதிகரிக்க வேண்டும், இதனால் ஒவ்வொரு முறை உங்கள் குழந்தை பால் குடிக்கும் போதும் அதன் அளவு அதிகரிக்கும். இது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வித்தியாசப்படுகிறது.
எனினும் பெரும்பாலான 1 முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 9 முறை பால் கொடுக்க வேண்டும், 3 முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 6-8 முறையும், 6 மாதங்களுக்குப் பிறகு ஒரு நாளைக்கு 6 முறை தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு கூடுதல் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய தாய்ப்பால் மட்டுமின்றி திட உணவுகளும் கொடுக்க ஆரம்பிக்கலாம். திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த பின்னர், ஒரு நாளைக்கு நான்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பது குறைத்து கொள்ளலாம்.
பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கான அட்டவணை : பாட்டில் பால் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம் மற்றும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 3-4 மணி நேர இடைவெளியை அதிகரிக்கலாம். 4 முதல் 6 மாதங்களுக்குள் ஒவ்வொரு நாளும் 4-5 மணிநேரத்திற்கு ஒரு முறையும், 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு 4-5 மணி நேரத்திற்கும் பால் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள் : ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய் பாலைத் தவிர வேறு திரவ உணவுகளை கொடுக்கக்கூடாது. தண்ணீர், பசும்பால் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. இவை உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்காது மற்றும் உங்கள் குழந்தைக்கு வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தை பிறந்து 6 மாதங்களில் தண்ணீர் அருந்த பழக்கலாம். 4-6 மாதங்களுக்கு பிறகு திட உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொள்ளலாம்.
குழந்தை பசியுடன் இருக்கிறது என்பதை எப்படி அறிவது : பொதுவாக குழந்தை அழுதால் மட்டுமே பசியாக இருப்பதாக நினைத்து பால் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியை கவனித்து சரியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வாயில் கை வைப்பது, வாயைத் திறப்பது போன்ற எளிய விஷயங்கள் மூலம் உங்கள் குழந்தை பசியுடன் இருப்பதை காணலாம்.