குழந்தைகளை நல்ல முறையாக வளர்த்தெடுப்பதைக் காட்டிலும் பெற்றோருக்கு முக்கியமான கடமை வேறெதுவும் இருக்க முடியாது. பண்பாளராகவும், நேர்மையாளராகவும் குழந்தைகளை வளர்த்தெடுக்கும் அதே சமயத்தில் தனித்திறமைகளையும் ஊக்குவிக்க வேண்டும். இது எல்லாவற்றையும் விட குழந்தைகளுக்கு எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுக்கலாம் என்பதே பிரதான கேள்வியாக அமைகிறது.
குழந்தைகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டால் அவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். சரி எது, தவறு எது என்று முடிவு செய்கின்ற பக்குவம் அவர்களுக்கு ஏற்படும். அதே சமயம், சுதந்திரம் எல்லை மீறிச் சென்றால் குழந்தைகள் வழி தவறிச் செல்லவும், தவறு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கொடுக்கலாம் என்ற கேள்வி மிக முக்கியத்துவம் பெறுகிறது.
எவ்வளவு சுதந்திரம் கொடுக்கலாம் என்ற குழப்பம் பெற்றோருக்கு இருக்கலாம். குழந்தையின் வயது என்ன, எந்த அளவுக்கு பக்குவம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது, குடும்பத்தின் ஆதரவு குழந்தைகளுக்கு எவ்வளவு தூரம் தேவைப்படுகிறது என்பதைப் பொருத்து அவர்களுக்கான சுதந்திரத்தை முடிவு செய்யலாம். கடந்த காலங்களில் சில பொறுப்புகளை குழந்தைகளிடம் ஒப்படைத்து, அதில் அவர்கள் தடுமாறியிருந்தால் அதற்கேற்ப உங்களின் வழிகாட்டுதல்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
வயதை பரிசீலிக்கலாம் : குழந்தைகளுக்கு என்ன வயது ஆகிறது என்பதைப் பொருத்தே அவர்களுக்கான சுதந்திரத்தை தீர்மானிக்க முடியும். 18 வயதுக்கு உட்பட்ட சிறார், சிறுமிகள் என்றால் இரவில் தாமதமாக வீடு திரும்புவதற்கு அனுமதிக்கக் கூடாது, உங்கள் மேற்பார்வையின்றி செல்ஃபோன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கக் கூடாது.
எல்லைகளை வகுக்க வேண்டும் : குழந்தைகள் நட்பாக பழகவும், விளையாடவும் அனுமதிக்கப்பட வேண்டும். அதே சமயம் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும், எவ்வளவு நேரம் வெளியிடங்களில் சுற்றுவதற்கு அனுமதிப்பது போன்ற விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. குறிப்பாக, சாப்பாடு நேரத்திற்கு வீட்டிற்கு வந்து ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியமாகும்.
சுதந்திரமும், பொறுப்புகளும் : குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல, பொறுப்புணர்வுடன் கூடிய சுதந்திரம் என்பதை அவர்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும். தினசரி வீட்டு வேலைகள், கரெண்ட் பில் கட்டும் வேலை, மளிகை பொருள் வாங்கும் வேலை போன்றவற்றை அவர்கள் மூலமாக செய்ய வேண்டும். நல்ல தரமான சேவையை பெறவும், தரமான பொருள்களை வாங்கவும் குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.