இன்றைய உலகில் வளரக் கூடிய குழந்தைகள் பெரும்பாலும் ஆண்டிராய்ட் ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் கேம் போன்றவையே அவர்களது உலகமாக மாறி போயுள்ளது. பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும், ஆசிரியர்களை எப்படி அணுக வேண்டும் என்பது போன்ற பல்வேறு பழக்க வழக்கங்களை இன்றைய குழந்தைகள் அவ்வளவாக தெரிந்து வைத்திருப்பதில்லை. இதனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு பொது சமூகத்தில் அடியெடுத்து வைக்கும்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பெரியவர்களுக்கு மதிப்பு அளிப்பது: பெரியவர்களுக்கு மதிப்பு அளிப்பதுதான் மிக முக்கியமான சமூக பழக்க வழக்கம் ஆகும். அது வீடு என்றாலும் சரி அல்லது பள்ளி என்றாலும் சரி, பெரியவர்களை அன்போடும், பணிவோடும் வரவேற்பது குறித்து உங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். உங்கள் குழந்தை மீதான மதிப்பை இது உயர்த்தும்.
கவனம் செலுத்த கற்பிக்க வேண்டும்: உரையாடல் என்பது இருவழிப் பாதை போன்றது. ஆனால், ஆசிரியர்களோ, பெரியவர்களோ எதையாவது உங்கள் குழந்தைகளிடம் விவாதிக்கும்போது, அவர்கள் அதுகுறித்து கண்டுகொள்ளாமல் விளையாட்டுத் தனமாக இருப்பார்கள். ஆகவே, பிறர் பேசுவதை கவனமுடன் கேட்டறிந்து, அதற்கு பதில் சொல்ல கற்றுக் கொடுங்கள்.
திறன்சார்ந்த விளையாட்டுகளை கற்றுக் கொடுங்கள்: குழந்தைகள் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் கேம்ஸ்களில் மூழ்கியிருக்கின்றனர். இதனால், கண் பார்வை பாதிக்கப்படும். இதர உடல் நல பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே, வெளியே சென்று விளையாட ஊக்குவியுங்கள். இதுமட்டுமல்லாமல் உங்கள் குழந்தையின் அறிவுத் திறனை வளர்த்தெடுக்கும் வகையில், அறிவுசார்ந்த விளையாட்டுகளை கற்றுக் கொடுங்கள். வாசிப்பது, ஓவியம் வரைவது போன்ற கலைகளை கற்க ஊக்குவியுங்கள்.