தன்னுடைய குழந்தை உயரமாக வளர வேண்டும் என்பது பல பெற்றோர்களின் ஆசை. ஒரு நபர் சராசரியான உயரத்தை விட கொஞ்சம் அதிகமாக இருப்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவர்களின் ஆளுமையையும் அதிகரிக்கும். ஒருவர் உயரமாக இருக்கும் பொழுது பலரின் கவனமும் அவர் மீது தான் இருக்கும். அதிக உயரம் என்பது வசீகரமாக காணப்படுகிறது. இந்த அடிப்படையில் பல பெற்றோர்களும் தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்த முடியுமா?
குழந்தைகள் எவ்வளவு உயரம் வளர்வார்கள் என்பதை அவர்களின் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. ஒரே குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும் பொழுது ஒரு குழந்தை உயரமாகவும், ஒரு குழந்தை நடுத்தர உயரமும் வளர்வதற்கான காரணம் அவர்களின் ஜீன்கள் தான். இவை தவிர்த்து ஒரு சில உடல் ரீதியான காரணங்களும் அவர்களின் உயரத்தை பாதிக்கலாம். ஆனால் உடற்பயிற்சிகள் மூலம் குழந்தையின் உயரத்தை அதிகப்படுத்தமுடியும்.
நீச்சல் பயிற்சி :தண்ணீரில் ஆடுவது என்றாலே எல்லா குழந்தைகளும் மிகவும் விரும்புவார்கள். எனவே நீச்சல் பயிற்சியை குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். மேலும், நீச்சல் பயிற்சி குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கும். நீச்சலடிக்கும் போது ஒட்டுமொத்த உடலுக்கான பயிற்சியை அளிக்கிறது, உயரத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
பாதங்களை தொடும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி :கால்களை முன்புறம் நீட்டியவாறு கீழே அமர்ந்து, இரண்டு கைகளாலும் பாதங்களைத் தொடும் பயிற்சி, முதுகுப்புறம், தொடை மற்றும் கணுக்கால்கள் தசைகளை வலுப்படுத்தி, ஸ்ட்ரெட்ச் செய்து, உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த உடற்பயிற்சியை சிறுவயதில் இருந்தே செய்வதற்கு உங்கள் குழந்தைக்கு பயிற்சி அளிக்கலாம்.
கோப்ரா போஸ் :குப்புறப் படுத்துக்கொண்டு, கைகளை தரையில் ஊன்றி, இடுப்பில் இருந்து தலை வரை உடலின் மேற்பகுதியை நல்ல பாம்பு படம் எடுப்பது போல மேற்புறமாக வளைத்து, கோப்ரா போஸ் என்று கூறப்படுகிறது. உங்கள் கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை உடலின் முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டுமே நன்றாக ஸ்ட்ரெட்ச் ஆகி, தசைகள் வலுவடையும். உடல் வளர்ச்சி சீராக இருப்பதற்கு இந்த யோகா பயிற்சி உதவுகிறது.