குழந்தை வளர்ப்பு என்பது நாம் நினைப்பதை விடவும் சாவாலான ஒன்று. சிறு வயது முதலே குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது போன்றவற்றை எடுத்து கூறி வளர்க்க வேண்டியது அவசியம். அப்போது தான் குழந்தைகளிடம் நல்ல பண்புகள் உண்டாகும். இது போன்ற நற்பண்புகள் குழந்தைகளை சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்களாக உருவாக்கும். அந்த வகையில் குழந்தைகளுக்கு சுற்றுசூழல் முதல் மற்ற செயல்பாடுகளின் மூலம் எப்படி ஆளுமை திறனை வளர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கவனித்தல் : குழந்தைகளின் ஆளுமை திறனை வளர்க்க முதலில் பெற்றோர்கள் செய்ய வேண்டியது குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்பது தான். மேலும் அவர்களின் யோசனைகளை நீங்கள் மதிக்க வேண்டும். குழந்தைகள் தானாகவே முன்வந்து உங்களிடம் எதாவது கூற வந்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் கேட்பது நல்லது. இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு அவர்களின் மீது அதிக நம்பிக்கை பிறக்கும். மற்றவர்கள் தன்னை மதித்து கேட்பதால் தன்னம்பிக்கை உள்ள ஆளுமைக்களாக வளர்வார்கள்.
ஒப்பிடுதல் : எல்லா குழந்தைகளும் தனித்துவமானவர்கள். எனவே உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். குழந்தைகளை ஒப்பிட்டு பேசுவதால் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு இருக்க கூடிய திறன்களை எப்போதும் பாராட்டி மகிழுங்கள். இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு அவர்களின் மீது எதையும் சாதிக்கலாம் என்கிற நம்பிக்கை பிறக்கும்.
குறைவான திரை நேரம் : இன்றைய குழந்தைகளின் மொபைல், லேப்டாப் போன்றவற்றை கொடுத்து விடுகிறோம். இதனால் பல்வேறு பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இது போன்ற டிஜிட்டல் கேட்ஜெட்களை தருவதால் அவர்களின் படைப்பாற்றல் திறன் குறைய தொடங்கும். எனவே இதற்கான அவசியம் அதிகம் இருக்கும் நேரங்களில் மட்டும் பயன்படுத்த கொடுங்கள். அவர்கள் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் நேரம் செலுத்துவதை விடவும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேரம் செலுத்துவது பற்றி கற்று கொடுங்கள்.
சுதந்திரம் : குழந்தைகளுக்கு தேவையான எல்லா சுதந்திரத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம். மேலும் அவர்களுக்கு பிடித்ததை செய்ய விடுங்கள். எனினும் எப்போதாவது அவர்கள் தவறு செய்தால் அதை மோசமான முறையில் கண்டிக்காமல், பொறுமையாக எடுத்து கூறுங்கள். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்களாக வளர்வார்கள்.
நேரம் செலவிடுதல் : இன்று பல பெற்றோர்கள் செய்கின்ற மிக பெரிய தவறு குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் இருப்பது தான். சிறு வயதில் குழந்தைகளின் வளர்ச்சி என்பது பெற்றோர்களின் நடத்தையை பொறுத்து அமைகிறது. எனவே உங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். குழந்தைகளை உடல் அளவிலும், மனதளவிலும் வளர்ச்சி பெற செய்வதற்கு அதிக நேரம் அவர்களுடன் விளையாடுங்கள், அவர்களுக்கு பிடித்தவற்றை பற்றி பேசுங்கள், அன்பான பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.