எனவே இதற்கு தகுந்தவாறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. குழந்தைகளின் சரியாக வளர்ச்சிக்கு குறிப்பிட்ட வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைய தேவைப்படுகிறது. எனினும் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகளை கொடுக்க வேண்டும் என தெரியாமல் தடுமாறுகின்றனர். குழந்தைகளின் உணவுமுறை பற்றி கவலைப்படும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவர் எனில், அவர்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் உணவுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பால் பொருட்கள்: வளரும் குழந்தைகளுக்கு பால், தயிர், சீஸ் போன்ற டயரி பொருட்கள் மிகவும் பயனுள்ளது. பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரு முக்கிய மினரல்கள் இருக்கின்றன. இவை குழந்தைகளின் ஆரோக்கியமான பற்கள், எலும்புகள், நகங்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத மற்றொரு ஊட்டச்சத்தான வைட்டமின் டி பாலுடன் செறிவூட்டப்பட்டுள்ளது. எனவே உங்கள் வளரும் குழந்தைக்கு தினசரி 2 கிளாஸ் பால் கொடுக்க வேண்டும். அதே போல தினமும் அவர்களின் டயட்டில் தயிர் சேர்ப்பது ஆரோக்கிய எலும்புகள் மற்றும் வலுவான பற்களை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களின்ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
முட்டைகள்: வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சிறப்பான ஒரு உணவு முட்டை. புரோட்டீன் ஹவுஸ் என அழைக்கப்படும் முட்டையில் இருக்கும் அதிக புரத உள்ளடக்கம் குழந்தைகளுக்கு நன்மை பயக்கிறது. தவிர முட்டையில் இருக்கும் பி வைட்டமின், குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கும் தேவையானது. முட்டையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, ஃபோலேட், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் செலினியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே முட்டைகளை வேக வைத்தோ, ஆம்லேட் செய்தோ அல்லது வேறு ஏதேனும் டிஷ் செய்தோ கொடுக்கலாம். வாரத்தில் 4 - 5 நாட்கள் காலை உணவின் போது 2 முட்டைகளை குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
ஓட்ஸ்: குழந்தைகளுக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்கும் சிறந்த காலை உணவுகளில் ஒன்றாக ஓட்ஸ் இருக்கிறது. ஆய்வு ஒன்றின்படி காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் குழந்தைகள் பள்ளி வகுப்பு நேரத்தில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும் என்பது தெரிய வந்துள்ளது. ஓட்ஸில் அடங்கியிருக்கும் வைட்டமின் பி & மற்றும் வைட்டமின் ஈ, பொட்டாசியம், ஜிங்க் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த மூளை வளர்ச்சி, உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தவிர ஓட்ஸில் அதிகம் இருக்கும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து குழந்தைகளை நீண்ட நேரம் பசியின்றி திருப்தியாக வைக்க உதவும்.
ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியில் கண் வளர்ச்சியை மேம்படுத்தும் மற்றும் செல் சேதத்தைத் தடுக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. செரிமானத்தை அதிகரிக்கும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும் வகையில் நிறைய நார்ச்சத்துகளை கொண்டுள்ளது. ப்ரோக்கோலியில் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ப்ரோக்கோலியை பச்சையாக அல்லது ஜூஸாக சாப்பிட்டால் அதிக நன்மைகளை பெறலாம். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சூப் அல்லது பொரியல் வடிவில் கொடுக்கலாம்.