குழந்தைகள் எப்போதுமே சுறுசுறுப்பானவர்கள். நாள் முழுவதும் ஓடுவது, ஆடுவது, பொம்மைகளுடன் விளையாடுவது என பொழுதைக் கழிக்கவே விரும்புகின்றனர். இரவோ, பகலோ குழந்தைகளை பொறுத்தவரை விளையாட்டிற்கு என தனி நேரம், காலம் கிடையாது. குறிப்பாக சில குழந்தைகள் இரவு நேரம் ஆனாலும் தூங்க மாட்டேன் என அடம்பிடிப்பார்கள். அம்மாக்கள் என்ன தான் அழகாக கதை சொல்லியும், பாட்டு பாடியும் தூங்க வைக்க முயன்றாலும் அதனை ஆக்டிவாக கேட்டுக்கொண்டிருப்பார்களோ தவிர தூங்க மாட்டார்கள். அதனால் தான் இன்று குழந்தைகளை எப்படி பாசாங்கு செய்து தூங்க வைப்பது என்பது குறித்து நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள சில வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளப் போகிறோம்...
தூங்கும் படி கட்டாயப்படுத்தாதீர்கள்: குழந்தைக்கு ஒரே மாதிரியான தூக்க முறையை பழக்கப்படுத்துவது பெற்றோரின் கடமை தான் என்றாலும், ‘தூங்கு, தூங்கு’ என தூக்கத்தை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். எனவே இரவு நேரத்தில் குளிக்க வைப்பது, பாட்டு பாடுவது, மென்மையான இசையைக் கேட்பது, கதை புத்தகங்களைப் படிப்பது, படுக்கையில் உள்ள குழந்தையை மெதுவாக வருடிக் கொடுப்பது போன்ற பழக்கத்தை உருவாக்கலாம்.
வழக்கத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்: ஆடி, பாடி, ஓடி விளையாடும் குழந்தைக்கு ஓய்வு என்பது நிச்சயம் தேவை. அப்போது தான் அடுத்த நாளும் சோர்வில்லாமல் அதே உற்சாகத்துடன் வலம் வர முடியும். எனவே தினந்தோறும் தூக்கத்திற்கு ஒரே மாதிரியான நேரத்தை பின்பற்றுங்கள். எக்காரணம் கொண்டு அதில் மாற்றம் செய்யாமல், குழந்தையை ஒரே தூக்க நேரத்திற்கு மாற்றுவது இயல்பான தூக்கத்தை தூண்டும்.
ஆயத்தமாக நேரம் கொடுங்கள்: குழந்தையின் அறையை பகலில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட, இரவு முழுவதும் அறையை அமைதியாகவும், சற்றே குறைவான வெளிச்சத்துடன் வைக்க வேண்டும். பசி அல்லது பயம் காரணமாக குழந்தை அழுதால் அதனை உடனடியாக சமாதானப்படுத்த வேண்டும். குறிப்பாக குழந்தை பசியால் அழுதால் அதே அறையில் வைத்து உணவூட்ட வேண்டும் என்றும், அப்போது தான் குழந்தைகள் மீண்டும் தூக்க நிலைக்கு செல்வார்கள் என்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வழக்கம், விருப்பத்திற்கு மதிப்பளியுங்கள்: வழக்கம், விருப்பத்திற்கு மதிப்பளியுங்கள்: கைக்குழந்தைகள் மற்றும் நடை பழகும் குழந்தைகளுக்கு அவர்களது அன்றாட பழக்கவழக்கங்கள் தான் சூழ்நிலையை புரிந்துகொள்ள உதவுகின்றன. எனவே சிறு குழந்தைகள் பொதுவான நிகழ்வுகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு அனைத்தையும் கற்றுக்கொள்ள நேரம் கொடுக்க வேண்டும். அதேபோல் அவர்களது வழக்கமான பழக்க வழக்கங்களை தொடர்ந்து செய்யவும் அனுமதிக்க வேண்டும்.
ஸ்கிரீன் டைம் கொடுக்காதீர்கள்: இரவில் தூங்கச் செல்லும் முன்பு குழந்தைகள் ஃபோன் அல்லது டேப்லெட் பயன்படுத்துவதை தாய்மார்கள் அனுமதிக்க கூடாது. ஏனெனில் ஸ்கிரீனில் இருந்து வெளியாகும் வெளிச்சமானது குழந்தைகளின் தூக்க ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்போன், டி.வி, கம்யூட்டர், லேப்டாப், டேப்லெட் என அனைத்து ஸ்கிரீன்களையும் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
வேடிக்கையாக பேசுங்கள்: உங்கள் குறுநடை போடும் குழந்தையை வெளியில் ஓடவும், குதிக்கவும், விளையாடவும் ஊக்குவிக்கவும். இது அவர்களின் ஆற்றலைச் சிறப்பாகச் செலவிட உதவும். அதேபோல் குழந்தையை உறங்க வைக்கும் முன்பு அவர்களிடம் சிறிது நேரம் மனம் விட்டு வேடிக்கையாக பேசுங்கள், இது அவர்களது மன அழுத்ததை குறைத்து நன்றாக உறங்க ஊக்குவிக்கும்.