பொதுவாக கர்ப்பிணி பெண்கள் தங்களது அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த குளிர்காலத்தில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற பயம் அனைவருக்கும் இருக்கும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆனால் குளிர்காலத்தில் தான் எண்ணற்ற பழங்களின் சீசன் காலமாகும்.
உதாரணமாக ஆரஞ்சு, கிவி, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழங்கள் குளிர்காலத்தில் பரவலாகக் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், தொற்றுநோய்களை தடுப்பதற்கும் உதவி புரிகிறது. மேலும் வெவ்வேறு வைரஸ்கள், பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆரஞ்சு : கர்ப்பிணி பெண்களுக்கு நீர்ச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். ஆரஞ்சு பழத்தில் நீர்ச்சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும். அதிலும் ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை தினமும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான சருமத்துடன் பிறக்கும். இது இரும்பு சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. ஆரஞ்சு பழங்களை சாலட், ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.
மாதுளை : மாதுளை ஒரு விதைகள் நிறைந்த பழமாகும். மாதுளையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் ஒரு மாதுளை சாப்பிடுபவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு வராது. கர்ப்ப காலத்தில், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மாதுளை மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. மாதுளை-பீட்ரூட் இரண்டையும் சம அளவில் எடுத்து ஜூஸ் செய்து அருந்தலாம். கர்ப்பப்பைத் தொற்றுகள் வராமல் பாதுகாப்பதிலும் மாதுளை சிறந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கவும், கால்சியம், தாது உப்புக்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் மாதுளை நல்ல மருந்தாகும்.
கிவி : கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு புளிப்பு மற்றும் இனிப்பு சுவை மீது அலாதி பிரியம் இருக்கும். அவர்களுக்கு கிவி நல்ல தேர்வாக இருக்கும். கிவி பழத்தில் போதுமான அளவு ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, ஏனெனில் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு இன்றியமையாதவை. கர்ப்பிணி பெண்கள் கிவி பழத்தை உட்கொள்வது குழந்தைகளில் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
நெல்லிக்காய் : அம்லா என்றும் அழைக்கப்படும் இந்தியன் நெல்லிக்காய்யில் வைட்டமின் சி , வைட்டமின் வைட்டமின் ஈ, ஏ, இரும்பு சத்து , கால்சியம் மற்றும் ஃபைபர் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காயை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். இது சளி மற்றும் வைரஸ் தொற்றுகள் அண்டாமல் பாதுகாக்கிறது. கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் ஒவ்வாமை, தலைசுற்றல், உணவுபிடிக்காத நிலையும் உண்டாகும். இத்தருணத்தில் நெல்லிக்காய் சாப்பிடலாம். தினமும் காலையில் ஒரு நெல்லியை துண்டுகளாக்கி இரண்டு மூன்று துண்டுகளை சாப்பிடுவதன் மூலம் வாந்தி உணர்வை கட்டுப்படுத்தலாம். மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
ஆப்பிள் : சிவப்பு அல்லது பச்சை ஆப்பிள்கள் இரண்டுமே எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. ஆப்பிள் பழத்தில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. ஆப்பிள் உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும். கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைத்து, சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் இருப்பர். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். மேலும் ஆப்பிளில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு உதவுகின்றன. இதனால் கர்ப்பிணி பெண்கள் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபட துணை புரிகிறது.