ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நல்ல நடத்தை மற்றும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிலர் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர்கள் போக்கிலேயே வளர்க்கிறார்கள், சிலர் கடுமையான கண்டிஷன்கள் போட்டு வளர்க்கின்றனர்.குழந்தையின் ஆளுமையை பொறுத்து ஒவ்வொரு பெற்றோர் வளர்ப்பு விதமும் வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் சில பொதுவான தவறுகள் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
பொது இடத்தில் திட்டுவது : உங்கள் குழந்தையை பொது இடத்தில் கத்தாதீர்கள், இதனால் அவர்கள் மற்றவர்கள் மத்தியில் குற்றஉணர்ச்சியாக உணர்வார்கள். மேலும் நல்ல பழக்கவழக்கங்களைத் தூண்டுவதற்குப் பதிலாக, அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். இதன் விளையாவாக அவர்கள் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்களை வெறுக்கத் தொடங்கலாம். எனவே அவர்கள் தவறு செய்தாலும் தனியாக அழைத்து சென்று கண்டிப்பது நல்லது.
அவர்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் இருப்பது : உங்கள் குழந்தையை சரியாக வளர்க்க முயற்சிக்கும் போது உங்கள் குழந்தையின் தேவைக்கும், விருப்பத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை கற்பிப்பது மிக முக்கியமானது. இருப்பினும், உங்கள் குழந்தையின் வேண்டுகோளை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள், கவனிக்கவில்லை என்று அவர்களுக்கு தோன்றினால் அது கவலையை தரும். அவர்கள் நம்பத்தகாத விஷயங்களை கூறினாலும் அலட்சியமாக இருப்பதற்குப் பதிலாக, அவற்றை காது கொடுத்து கேளுங்கள்.
தெளிவற்ற விதிகளை அமைத்தல் : பெரியவர்களைப் போலல்லாமல், குழந்தைகள் விதிமுறைகளை செயல்படுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு பெற்றோராக, நீங்கள் அவர்களுக்காக அமைத்த விதிகளின் விவரங்களை விளக்க வேண்டும். வீட்டிலேயே ஒரு காரியத்தை செய்யும்படி அவர்களிடம் நீங்கள் கேட்கலாம் என்றாலும், அதற்கான காரணத்தை தெளிவாக விளக்குவது அவசியம். எனவே, தெளிவற்ற வழிமுறைகளை வழங்காதீர்கள், நீங்கள் எதை கூற முயற்சிக்கிறீர்கள் என்பது குறித்து இன்னும் தெளிவாக இருங்கள்.
தொடர்ந்து அசிங்கப்படுத்துவது, குற்றம் சாட்டுவது : ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்கின்றன, அது தவறு என ஒரு முறை புரிய வைத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இருப்பினும், அதைப் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டாக மாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. அவை குழந்தைகளின் நடத்தையில் மேலும் சிக்கலை தரும். எனவே, தொடர்ந்து அசிங்கப்படுத்துவை தவிர்க்கவும்.
உங்கள் குழந்தைகளுக்கு லஞ்சம் கொடுப்பது : உங்கள் குழந்தையை அவர்களின் சேட்டைகளை நிறுத்தும்படி நீங்கள் லஞ்சம் கொடுத்தால், அது நீண்ட காலத்திற்கு ஒரு பழக்கமாக மாறும். நிச்சயமாக சில நேரங்களில், உங்கள் பிள்ளைகள் அடம் பிடிக்கலாம். ஆனால், உங்கள் வழியை நீங்கள் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தால், அது சிறிது நேரம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், ஆனால் நீண்ட காலத்திற்கு அல்ல. அதற்கு பதிலாக அவர்கள் எங்கே தவறு செய்தார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். பின்னர் பொறுமை மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அப்போதுதான் அவை எதிர்காலத்தில் நன்றாக இருக்கும்.
மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுவது : பல முறை, பெற்றோர்கள் தங்கள் குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடுவது வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை அடைய தூண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையைச் சொன்னால், அது குழந்தையின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையில் களங்கம் மட்டுமே ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் குழந்தைகள் எல்லோரையும் விட குறைவாக உணருவார்கள். இதனால் சிறு வயதிலேயே அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். எனவே, உடன்பிறப்புகளுக்கிடையில் கூட ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்ற உண்மையை ஒப்புக் கொண்டு உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளருங்கள்.