எந்த ஒரு பெற்றோரும் தன்னுடைய குழந்தை கஷ்டப்படுவதை பார்க்க விரும்ப மாட்டார்கள். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் பல்வேறு காரணிகள் உள்ளன. மேலும் இன்றைய கால குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அவர்களுக்கு சரியான ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அவர்கள் கஷ்டத்திலோ, மன அழுத்தத்திலோ இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆறுதலாக குழந்தைகளின் பெற்றோர்கள் இருப்பது அவசியம். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் மன அழுத்தத்திலோ அல்லது கவலையாகவோ இருந்தார்கள் என்றால் அவர்களை சரியாக்க சில குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
அன்பாக இருங்கள் : உங்கள் பிள்ளைகளின் கடினமான காலகட்டத்தின் போது அவர்களுக்கு உறுதுணையாக, எந்த வித நிபந்தனைகளும் இன்றி அவர்களை அன்பு செய்பவராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். இது அவர்கள் வாழ்க்கையில் என்ன பிரச்சனையை ஏற்பட்டாலும் சமாளிக்கவும், தற்போது உள்ள பிரச்சனைகளிலிருந்து வெளிவருவதற்கான மனோதிடத்தையும் அளிக்கும். தவறு செய்வது மனித இயல்பு என்றும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே சரியானது என்றும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
பிள்ளைகளோடு நேரம் செலவிடுங்கள்: இன்றைய நவீன காலத்தில் பணம் சம்பாதிப்பதற்காகவே இயந்திரம் போல இயங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடிவதில்லை. நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்து எவ்வளவு வசதி வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தாலும் நீங்கள் அவர்களோடு நேரம் செலவிடுவதை விட அதிக சந்தோஷத்தை அவர்களுக்கு எதுவும் கொடுத்து விடாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு விளையாடலாம், எங்கேனும் வெளியே சென்று வரலாம், பார்ட்டிகளுக்கு அல்லது பீச்சுக்கும் கூட சென்று வரலாம், ஒன்றாக உணவருந்தலாம். இது போன்ற செயல்களின் மூலம் பெற்றோருக்கும் குழந்தைக்குமான உறவு பலப்படுவதுடன் குழந்தைகளின் மன அழுத்தம் வெகுவாக குறைகிறது.
பிள்ளைகளிடம் வெளிப்படையாக பேசுங்கள் :பிள்ளைகளிடம் வெளிப்படையாக பேசுங்கள் மனதில் தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. இதனால் அவர்களும் தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை பகிர்ந்து கொள்வதுடன், அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.
குழந்தைகளின் தேவைகளின் மீது கவனம் தேவை : குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் சரியான தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டியது பெற்றோர்களின் கடமை. மேலும் குழந்தைகள் தனிமையாக இருப்பதைப் போல் உணராத வண்ணம் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து, உங்களது வீட்டையே அவருக்கும் இந்த பிடித்த இடமாக மாற்ற வேண்டும்.
தங்களை மாற்றிக் கொள்வதற்கு தேவையான கால அவகாசத்தை கொடுங்கள்: பெரியவர்களாக நாம் இருப்பதைப் போல் குழந்தைகள் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. நாம் விரும்பாத ஒரு விஷயம் நடந்தால் நம்முடைய அனுபவத்தினாலும் மனமுதிர்ச்சியினாலும் நம்மால் அதிலிருந்து வெளிவந்து அந்த விஷயத்தை எளிதாக கையாள முடியும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியல்ல அவர்கள் இப்பொழுது தான் கற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். எனவே சிறு சிறு தோல்விகள் கூட அவர்களுக்கு கவலையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம். எனவே அதில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வரையில் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து எவ்வாறு அதிலிருந்து வெளி வருவது என்பதை பற்றி அறிவுரை கூறி அவர்களே நல்வழிப்படுத்தலாம்.