குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண தம்பதிகள் முதல் நட்சத்திர தம்பதிகள் வரை என எல்லோருக்கும் இருக்கும் ஒரு சவாலான விஷயம். கற்சிற்பம் ஒன்றை அழகுற வடிவமைப்பதற்கு சிற்பிக்கு இருக்கும் கவனம் மற்றும் பொறுமையைபோல், ஒவ்வொரு நொடியும் குழந்தையை பார்த்து பெற்றோர் வளர்க்கும்போது அவர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் சமுதாயத்தில் ஜொலிப்பார்கள்.
அந்தவகையில், நட்சத்திரங்கள் தங்களின் குழந்தை வளர்ப்பில் அதீத கவனத்தை செலுத்துகின்றனர். விராட்கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி முதல் கரீனா கபூர் தம்பதி வரை நட்சத்திரங்கள், தங்களின் குழந்தை வளர்ப்பில் கொடுக்கும் முக்கியத்துவத்தில் இருந்து, நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறார்கள், அவர்கள் முன் எப்படி நடந்து கொள்கிறார்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளும்போது, அதனை நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க முடியும்.
நட்சத்திரங்களாக இருப்பவர்கள், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக நேரம் ஒதுக்குவதை ஒருபோதும் தவிர்க்க மாட்டார்கள். தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், லைப் ஸ்டைலை சரியாக கடைபிடிப்பது உள்ளிட்ட விஷயங்களை குழந்தைகளுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள். குழந்தைகள் முடிவெடுப்பதை அனுமதிப்பார்கள். இதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்களை, அவர்களிடம் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
விராட் - அனுஷ்கா : விராட் - அனுஷ்கா தம்பதிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் இருவருமே, தங்கள் குழந்தை மீது அளவுகடந்த அன்பை பொழிந்து வருகின்றனர். மேலும், இதில் இருவருக்குமே பங்கு உண்டு என்பதை உணர்ந்து, அதற்கேற்ப குழந்தையை வளர்த்து வருகின்றனர். இந்த இடத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்றால், குழந்தை வளர்ப்பில் இருவருக்குமே சரிசமமான பங்கு உள்ளது என்பதை உணர வேண்டும்.
கரீனா கபூர் : நடிகை கரீனா கபூர் இந்த ஆண்டு இரண்டாவது மகன் ஜஹாங்கீரைப் பெற்றெடுத்தார். மகனை கவனித்துக் கொள்வதில் முழு கவனத்தை செலுத்தி வரும் கரீனா கபூர், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றையும் தவறாமல் கடைபிடித்து வருகிறார். தாய்மை அடைந்த பெண்கள் அனைவரும், தங்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவத்தை கொடுத்தால் மட்டுமே, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
நகுல் மேதா - ஜான்கி பரே : ஒவ்வொருவரும் குழந்தை வளர்ப்பில் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு விருப்பமான முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என விரும்புவார்கள். அதாவது, கடவுள் பக்தியுடன் இருக்க வேண்டும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், நன்றாக விளையாடுபவராக இருக்க வேண்டும் என விரும்பி, அதற்கேற்க குழந்தைகளை பழக்கப்படுத்துவார்கள். அந்தவகையில், நகுல் மேதா - ஜான்கி பரே நட்சத்திர தம்பதி, தங்கள் குழந்தையை பாலின பேதமில்லாமல் வளர்க்க விரும்புகின்றனர்.
சமீரா ரெட்டி : நடிகை சமீரா ரெட்டி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். அவரும் பிரசவத்துக்குப் பிந்தைய பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, பிரசவத்துக்குப் பின் குழந்தைகளை வளர்க்கும்போது, நிச்சயம் பார்ட்னரின் உதவி தேவை என கூறுகிறார். பார்ட்னர்கள் அதனை சுமையாக கருதாமல், தாங்களாகவே அவர்களுக்குரிய வேலைகளில் பங்கெடுப்பது சிறந்தது என கூறும் அவர், இது கடமையும் கூட எனக் கூறியுள்ளார்.
அமீர்கான் - ஹிர்திக் ரோஷன் : திருமண வாழ்க்கை முறிவுக்கு வந்தாலும், தங்களுக்கு பிறந்த குழந்தைகளை இருவரும் சேர்ந்து வளர்க்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்கள் பாலிவுட் முன்னணி நடிகர்களாக இருக்கும் அமீர்கான், ஹிர்திக் ரோஷன். கருத்து வேறுபாடு காரணமாக அமீர்கான் - கிரண் ராவ் தம்பதியும், ஹிர்திக் ரோஷன் - சுசானே கான் தம்பதியும் மண வாழ்க்கையை முறித்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளிடம் எந்த பாரபட்சமும் காட்டாமல், அதே அன்புடன் வளர்கின்றனர். இதுவும் ஒருவகையான குழந்தை வளர்ப்பு முறையே.
குழந்தை பெற்றுக்கொள்ள வயது, ஒரு தடையல்ல. இந்த வயதில் நீங்கள் பெற்றோராக வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. கரீனா கபூர் தன்னுடைய 35வது வயதில் குழந்தை பெற்றுக்கொண்டார். இதேபோல், நடிகை ராணி முகர்ஜி உள்ளிட்டோரும் 35 வயதுக்குப் பிறகே குழந்தை பெற்றுக்கொண்டனர். எப்போது குழந்தை பெற்றுக்கொள்கிறோம் என்பதைவிட, அவர்களை வளர்ப்பதில் நம்முடைய நேரத்தை செலவிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார ரீதியாகவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்கின்றனர்.