அனைத்துப் பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் மிகவும் வல்லவர்களாகவும், திறமைசாலிகளாகவும் உலகத்தோடு போட்டி போடுபவர்களாகவும் வளர வேண்டும் என்று எண்ணம் இருப்பது நியாயமான ஒன்றுதான். முக்கியமாக மனதளவில் வலிமையாக இருக்கும் படி குழந்தைகளை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. மனதளவில் குழந்தைகளை வலிமையானவர்களாக மாற்றி விட்டாலே அவர்களது வாழ்க்கையை அவர்களால் திறம்பட வழி நடத்த முடியும். ஆனால் இன்றைய பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அவ்வாறு வலிமையானவர்களாக மாறும்படி வளர்க்கிறார்களா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும்.
இதைப் பற்றி மருத்துவர் ஒருவர் கூறுகையில், இன்றைய காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் செல்லமாக வளர்த்து வருகின்றனர். உங்கள் குழந்தைகள் திறமையானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் வளர வேண்டுமெனில் அவர்களது பிரச்சனைகளை சவால்களையும் அவர்களை தனியாக சந்திக்க செய்ய வேண்டும். பெரும்பாலான நேரங்களில் நாம் குழந்தைகளுக்கு உதவி செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு பல்வேறு செயல்களை செய்கிறோம். ஆனால் உண்மையிலேயே சில சமயங்களில் நீங்கள் தூர தள்ளி நின்று உங்கள் குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட வேண்டும். கீழே விழுந்து காயப்பட்டாலும் மீண்டும் எழுந்து வருவதும் ஒரு விதமான திறமை தான். மேலும் தங்கள் பிள்ளைகளுக்கு செய்யக்கூடாத சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார் அந்த மருத்துவர்
குழந்தைகளுக்காக வீட்டுப்பாடம் செய்வது ! பல பெற்றோர்களும் செய்யும் மிகப்பெரிய தவறு இது. தங்கள் குழந்தைகளின் வீட்டு பாடங்களை அவர்களுக்காக தாங்கள் செய்து கொடுப்பதை ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்வதினால் குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் மழுங்கடிக்கப்படுவதோடு அவர்களின் அறிவாற்றலும் மழுங்கடிக்கப்படுகிறது. வீட்டு பாடங்களை அவர்களே செய்து அவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு செய்ய வேண்டும்.
அவர்களுக்காக அனைத்து முடிவுகளையும் எடுப்பது ! உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவையும் நீங்கள் தலையிட்டு எடுப்பது சரியான காரியம் அல்ல. அவர்களுக்கான வாழ்க்கை முடிவுகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை அவர்களின் முடிவு தவறாக இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த முறை அவர்கள் சரியான முடிவை எடுக்க இது உதவும்.
அளவுக்கு அதிகமாக பாராட்டுவது : உங்கள் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் பாராட்டிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் அனைத்து விஷயங்களுக்கும் பாராட்டுக்களை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் அது கிடைக்காமல் போகும் பட்சத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
பிள்ளைகள் விரும்பிய அனைத்தையும் அவர்களுக்கு கொடுப்பது : தங்கள் பிள்ளைகளை செல்லமாக வளர்க்கும் அனைத்து பெற்றோரும் செய்யும் மிக முக்கியமான தவறு இது. குழந்தை கேட்கும் பொருளை எல்லாம் வாங்கி கொடுத்து விடுவார்கள். இதன் காரணமாக அத்தியாவசியமான பொருட்களுக்கும் ஆசையில் வாங்கும் பொருட்களுக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போக வாய்ப்புகள் உண்டு. எனவே அவர்கள் கேட்கும் அனைத்து விஷயங்களையும் அவர்களுக்கு செய்யாமல், ஒரு குறிக்கோளை கொடுத்து அந்த குறிக்கோளை அடையும் பட்சத்தில் அவர்கள் விரும்பியதை அளிப்பதாக உறுதி அளிப்பது நல்லது.