பிரசவம் பார்க்க வேண்டிய மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது; பிறக்கப்போகும் குழந்தைக்கு போதுமான ஆடைகளை வாங்கி முடித்தாகிற்று; ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, என்ன பெயர் வைக்கலாம் என்கிற பட்டியலும் தயாராக உள்ளது - இப்படி உங்கள் குழந்தையின் வருகைக்கு நீங்கள் அனைத்தையும் தயார் செய்து விட்டீர்களா.? மீண்டும் ஒருமுறை நன்றாக யோசித்து பாருங்கள்!
துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் மறந்துவிட்ட சில முக்கியமான விடயங்கள் உள்ளன. மேற்கண்ட "தயார் நிலைகளை" விட கீழ் காணவுள்ள விஷயங்களே - ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் நாம் கட்டாயம் கவனிக்க வேண்டிய - மிகவும் முக்கியமான பகுதிகள் ஆகும்.
பேட்ச் குக்கிங் (Batch Cooking) தயாராக இருக்க வேண்டும் : அதாவது ஒரு குறிப்பிட்ட உணவை அதிக அளவில் தயாரித்து, பின்னர் பயன்படுத்துவதற்காக அதை சிறுசிறு பகுதிகளாக சேமித்து வைப்பதே பேட்ச் குக்கிங் எனப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒரு தாயின் உடலில் எவ்வளவு ஆற்றல் பாக்கி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. பிறந்த குழந்தையை கவனித்துக்கொள்ள முடியாத அளவிற்கு கூட ஒரு தாய் மிகவும் சோர்வாக இருக்கலாம். அந்த நேரத்தில் 'ரெடிமேட்' ஆக கிடைக்கும் உணவுகளை ஒரு தாய்க்கு கொடுப்பது, அவருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்காமல் போகலாம். இந்த இடத்தில் தான் பேட்ச் குக்கிங் கைகொடுக்கும். ஒரு சுவையான மற்றும் சத்தான உணவு உங்கள் கையில் இருப்பதை பேட்ச் குக்கிங் உறுதி செய்கிறது.
லைஃப் இன்சூரன்ஸ் (Life Insurance) இருப்பதும் நல்லதே : உங்களிடம் ஒரு நல்ல ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளதா.? இங்கே 'நெகட்டிவ்' ஆக யோசிப்பதை விட 'ப்ராக்டிக்கல்' ஆக யோசிப்பதே நல்லது. உங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக நீங்கள் இல்லாவிட்டால் அவர்கள் சரியாகப் பராமரிக்கப்படுவார்கள் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள லைஃப் இன்சூரன்ஸ் ஒரு நல்ல மற்றும் புத்திசாலித்தனமான வழியாகும்.
மூத்த சகோதர - சகோரிகளுக்கு புரிதல் அவசியம் : பிறக்கப்போகும் குழந்தையை கவனிப்பதிலேயே உங்களின் 24 மணி நேரமும் செலவாகலாம். இதன் காரணமாக வரவிருக்கும் புதிய தம்பி, தங்கையை பற்றி உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் குழந்தைகளுடன் சரியாகப் பேசத் தவறியிருக்கலாம். அவர்களை உட்காரவைத்து, வரப்போகும் குழந்தையை பற்றி பேசுங்கள், நீங்கள் இன்னும் அவர்களை நேசிக்கிறீர்கள் மற்றும் ஆதரிக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். முடிந்தவரை இனிமேல் நீ ஒரு பெரிய சகோதரன் அல்லது சகோதரி என்று உற்சாகப்படுத்தங்கள்.
புதியதோ பழையதோ குழந்தையின் ஆடைகளை நன்றாக துவைக்கவும் : புதிதாக பிறந்த குழந்தைக்கு, உங்களின் மூத்த பிள்ளைகளுக்கு வாங்கிய ஆடைகளை பயன்படுத்தினாலும் சரி அல்லது புத்தம் புதிய ஆடைகளை வாங்கி இருந்தாலும் சரி, அவைகளை அணிவிக்கும் முன்னர், அது நன்றாக துவைக்கப்பட்டு, போதுமான நேரம் உலர வைத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். கூடுதல் புத்துணர்ச்சிக்காக ஆடைகளை அலமாரிக்குள் அடுக்கமால் அவைகளை வெளியில் வரிசைப்படுத்தி வைத்து இருப்பதும் நல்லதே.