

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாயின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தையின் வளர்ச்சி தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டியது முக்கியம். எனவே, தனக்குத் தேவையான உணவை நேரத்தோடு சாப்பிடுவதும், குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பால் தருவதும் பாலூட்டும் தாய்க்கு மிகவும் அவசியமான செயல்பாடுகள். காரணம், தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்கத்தான் தாய்க்குப் பால் ஊறும்.


பாலூட்டும் தாய் தினமும் 2500 முதல் 3000 கலோரிகள் கிடைக்கும் அளவுக்கு உணவை சாப்பிட வேண்டும். தேவையான அளவுக்குக் காய்கறிகளும் பழங்களும் கலந்த சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதும், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். குழந்தையின் உடல் அதை ஏற்றுக் கொள்ளும். ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் எப்போதும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஊட்டசத்துடன் இருக்க செய்ய வேண்டியவற்றை குறித்து காண்போம்.


பால் பொருட்கள் : பிரசவத்திற்கு பின்பு அனைத்து தாய்மார்களுக்கும் பால் மற்றும் பால் பொருட்களான நெய், தயிர் போன்றவற்றை எடுத்துக்கொள்வது அவசியம். இது தாய்மார்களில் கால்சியத்தை அதிகரிக்கும் மற்றும் பால் சுரத்தலை அதிகரிக்கும். தாய்மார்களில் பால் விநியோகத்தை அதிகரிக்க ஓட்ஸ் ஒரு அத்தியாவசிய உணவாகும்.


நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் : தினசரி பால் கொடுப்பதற்கு பெண்கள் நீரேற்றமாக இருப்பது அவசியம் என்பதால் குடிநீர் மிகவும் முக்கியமானது. அவர்கள் தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.


உணவு உட்கொள்ளலை அதிகரித்தல் : பழங்கள், காய்கறிகள், முழு கோதுமை ரொட்டி சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் கிடைக்கும். புரதத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவில் மீன், கடல் உணவு, கோழி, ஆட்டிறைச்சி, முட்டை ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. நட்ஸ், பருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், உலர்பழங்களைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது கார்போஹைட்ரேட்கள்தான். இவை தானிய உணவுகளில் அதிகம் உள்ளன. முழுதானிய உணவுகள் அல்லது சிறுதானிய உணவுகளைக் கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.


பூண்டு : பால் சுரப்பதை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் பூண்டு உங்கள் உணவில் இன்றியமையாத பொருளாக சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் இதனை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.


காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும் : காரமான உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொண்டால், அது தாய்ப்பாலின் வழியே குழந்தையின் உடலினுள் சென்று, அவர்களின் செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் மற்றும் சில நேரங்களில் வாந்தியை கூட ஏற்படுத்தும். எனவே மிகவும் காரமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் : காபி தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தாய்ப்பால் சுரப்பில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் அந்த காப்ஃபைன் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உடலுக்கும் சென்று, அதனால் அவர்களின் உடலினுள் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.