இன்றைய குழந்தைகள் பலர் ஊட்டச்சத்து குறைபாடுதான் பிறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்து கொள்ளும் உணவு வகைகள் தான். அரிசி, கோதுமை, போன்ற அதிக கார்போஹைடிரேட் உள்ள உணவுகளை பெரும்பாலும் எடுத்து கொள்வதால் மற்ற ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைப்பதில்லை. இதனால் பிறக்கின்ற குழந்தைக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய சில மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்.
அதன் பின் நாம் கொடுக்க கூடிய உணவு வகைகள் தான் குழந்தைகளுக்கு சத்துக்களைக் கொடுக்கும். குறிப்பாக 6-12 மாதங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமன்றி வேறு சில கூழ் போன்ற உணவு வகைகளை தரலாம். வேக வைத்து மசித்த காய்கறி, மசித்த பழங்களை தாராளமாக கொடுக்கலாம். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் குழந்தைக்கு முழு ஆரோக்கியத்தையும் தர கூடியவை. இந்த பதிவில் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான 5 வீட்டு உணவுகள் பற்றி பார்ப்போம்.
வீட்டில் தயாரித்த செரலாக் : 1 கப் அரிசியை நன்றாகக் கழுவி அதிலுள்ள தண்ணீர் முழுவதையும் வடித்து விடவும். கழுவிய அரிசியை சுத்தமான கிச்சன் டவலில் பரப்பி அதை முழுவதுமாக உலர விடவும். இப்போது ஒரு கிண்ணத்தில் 4 டீஸ்பூன் பாசி பருப்பு, 4 டீஸ்பூன் மைசூர் பருப்பு, 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 7 பாதாம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். அடுத்து இவை எல்லாவற்றையும் நன்கு கழுவி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டவும்.
பிறகு இவை அனைத்தையும் ஒரு சுத்தமான துணியின் மீது பரப்பி முழுமையாக உலர விடவும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில், 4 டீஸ்பூன் உடைத்த கோதுமையுடன் அரிசி சேர்க்கவும். எல்லாவற்றையும் சில நிமிடங்களுக்கு வறுக்கவும். இப்போது உலர்ந்த பருப்புகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் பொடியாகக் அரைத்து கொள்ளவும். இப்போது செரலாக் செய்ய, 1 டீஸ்பூன் பொடியை 1 கப் தண்ணீரில் 8-10 நிமிடங்கள் அல்லது சிறிது கெட்டியாகும் வரை வேக வைத்து குழந்தைக்கு ஊட்டலாம்.
மசித்த வாழைப்பழம் : பாதி வாழைப்பழத்தை எடுத்து கொண்டு தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து இந்த துண்டுகளை ½ கப் தண்ணீருடன் சேர்த்து மசித்து கொள்ளவும். ப்யூரி போன்ற பதம் வரும்வரை கலக்கவும். ப்யூரி நன்றாக இருக்க வேண்டுமென்றால், கலக்கும்போது சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த மசித்த வாழைப்பழ ப்யூரியை குழந்தைக்கு தந்து வரலாம்.
கேரட் ப்யூரி : 1 சிறிய கேரட்டை எடுத்து கொண்டு அதன் தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். இந்த கேரட் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீருடன் சேர்த்து கொள்ளவும். பிறகு இதை 10-12 நிமிடங்கள் வேக வைக்கவும். வேக வைத்த கேரட்டை சிறிது நேரம் ஆற விடவும். பிறகு அதிலுள்ள தண்ணீருடன் நன்றாக மசித்துக் கொள்ளலாம் அல்லது மிக்சியில் அரைத்துக்கொள்ளலாம். மென்மையான பேஸ்ட் போன்று வரும் வரை மசித்து கொள்ளவும்.
ஸ்ட்ராபெர்ரி ப்யூரி : இந்த ப்யூரி செய்வதற்கு 4 முழு ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து அதன் இலை பகுதியை நீக்கவும். அடுத்து இதை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு இந்த ஸ்ட்ராபெர்ரிகளை மென்மையாக்க 5 நிமிடங்கள் வேக வைக்கவும். வேக வைத்த பழங்களுடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து மசித்து கொண்டு, குழந்தைகளுக்கு பரிமாறலாம். இதை அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மசித்த பூசணி : பூசணிக்காயை ஒரு துண்டு எடுத்து கொண்டு அதன் விதைகளை நீக்கி தோலை உரித்து கொள்ளவும். பிறகு பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதில் சுமார் 4-5 துண்டுகளாவது இருக்க வேண்டும். அடுத்து பூசணிக்காயை சிறிது நீர் சேர்த்து 20 நிமிடம் வரை வேக வைக்கவும். பிறகு இதை சிறிது நிமிடங்கள் ஆற விடவும். இறுதியாக நன்றகா மசித்து கொண்டு குழந்தைகளுக்கு பரிமாறவும்.