உங்கள் முதல் குழந்தை வாழ்க்கையில் நிறைய மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்திருக்கும், அதே நேரம் ஒரு பெண் தாயாக முதல் குழந்தைக்கு பிறகு கர்ப்பத்தைப் பார்க்கும் விதம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். எப்படி பார்த்தாலும் இரண்டாவது குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு தம்பதியரின் தனிப்பட்ட முடிவு. ஆனால் இரண்டாவது குழந்தை எதற்காக பெற்று கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இது உங்களுக்கு அடுத்த குழந்தை வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவும்.
ஒருவருக்கொருவர் உறுதுணை : பல பெற்றோர்கள் தங்கள் மறைவுக்கு பிறகு குழந்தையின் எதிர்காலம் என்னாகும்.? யார் தங்களது குழந்தைக்கு உறுதுணையாக இருப்பார்கள்? என அவர்களின் எதிர்காலத்தை நினைத்தும் கவலை கொள்கிறார்கள். இரண்டாவது குழந்தையை பெற்று கொள்வதற்கான சிறந்த காரணங்களில் ஒன்று, உடன்பிறந்த 2 குழந்தைகளும் வாழ்நாள் முழுவதும் ஒருவொருக்கொருவர் துணையாக இருப்பார்கள். நீங்கள் சகோதரர், சகோதரிகளுடன் பிறந்தவர் என்றால் ஒருவருக்கொருவர் நீங்கள் பாசமாக இருப்பவர்கள் என்றால் உங்களது முதல் குழந்தைக்கும் இதுபோன்றதொரு உறவு கிடைக்கும்.
ஏற்கனவே உங்களுக்கு கர்ப்பத்தை பற்றி தெரியும் : முதல் முறையாக கர்ப்பமாக இருப்பது உண்மையில் சவாலாகவே இருக்கும். கர்ப்பகால சவால்களை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற அச்சம் மற்றும் பதற்றத்தை முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போது அனுபவித்திருப்பீர்கள். ஆனால் இரண்டாவது கர்ப்பத்திற்கு இது ஒரு பெரிய தடையாக இருக்காது. ஏனென்றால் உங்கள் முதல் கர்பத்தின் போதே நல்லது, கெட்டது அனைத்தையும் எதிர்கொண்டிருப்பீர்கள். எனவே கர்ப்பமாக இருக்கும் போது எற்படும் சவால்களை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்பதை இப்போது உங்கள் சொந்த அனுபவத்தின் மூலமே அறிந்திருப்பீர்கள். எனவே இரண்டாவது கர்ப்பம் பெரும்பாலும் எளிதாக இருக்கும். மருத்துவ ரீதியாக பொதுவாக இரண்டாவது பிரசவத்திற்கு பிரசவ நேரம் (labor time) விரைவாக இருக்கும்.
கூடுதல் உதவி : ஒரு குழந்தையை வளர்த்து சற்று பெரியவர்களாக மாற்றப்பட்ட பாடு போதாதா.! இரண்டாவது குழந்தையை பெற்று கொண்டால் அதை யார் கவனிப்பது என்ற கவலை உங்களுக்குள் இருக்கலாம். ஆனால் பல குடும்பங்களில் அழும் குழந்தையை பெற்றோரை விட முதல் குழந்தை எளிதாக சமாளிக்கும் காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? முதல் குழந்தை தங்கள் சிறிய உடன்பிறப்பை சிறப்பாக கையாள பல நேரங்களில் பெற்றோர்களுக்கு உதவுவார்கள். ஒரு குழந்தையின் பிரச்சினைகளை சமாளிக்க மற்றொரு குழந்தையால் எளிதில் முடியும்.
பயம் இருக்காது : உங்கள் முதல் குழந்தைக்கு தனிமை பிடிக்கவில்லை என்னும் போதும் அல்லது எப்போதும் கூடவே ஒரு ஆள் துணைக்கு இருக்க வேண்டும் என்ற நிலை இருப்பதும் உண்மையில் சவாலான ஒன்று. ஆனால் இந்த சிக்கலை இரண்டாவது பெற்று கொள்ள கூடிய குழந்தை மூலம் தீர்க்கலாம். உங்கள் முதல் குழந்தைக்கு சகோதர உறவு கிடைத்து விட்டால் தனியாக இருக்கும் உணர்வை போக்கலாம். மேலும் அவர்களுக்கு இருக்கும் இனம் புரியாத பயம் காரணமாக எப்போதும் நீங்கள் கூடவே இருக்க வேண்டும் என்ற நிலையையும் தவிர்க்கலாம். ஒருவருக்கொருவர் விளையாடி நல்ல ஆதரவாக இருந்து தோழர்களாக வளர்வார்கள்.
சிக்கல்களைத் தீர்க்கும் திறன் : வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்கும் குழந்தை மிகவும் செல்லமாக வளரும் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனும் குறைவாக இருக்கும். அதுவே 2 குழந்தைகள் வளரும் வீட்டில் நிச்சயம் அவர்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும். இருவருக்குள்ளும் அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவம் இருக்கும் அதே நேரம் போட்டி மற்றும் மோதல்களும் இருக்கும். இது இரு குழந்தைகளுமே எல்லாவிதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய திறனை வளர்க்கிறது மற்றும் இணக்கமான தீர்வுகளை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்கிறது. குழந்தைகளின் தகவல்தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் நுட்பங்களை மேம்படுத்துகிறது.