நம் வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரின் மனதிலும் தற்போது கோடை விடுமுறை பற்றிய சிந்தனைதான் அதிகளவில் உள்ளது. 2 நாட்கள் விடுமுறைக்கே வீட்டைப் புரட்டிப்போடும் குழந்தைகள் ஒருமாத விடுமுறையில் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தாலே பெற்றோர்களுக்கு அச்சமாக உள்ளது. வெயிலில் விளையாடுவது தொடங்கி வீட்டையே தலைகீழாக மாற்ற காத்திருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த கோடைக்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைத்தால் இந்த பயனுள்ள பொழுதுபோக்குகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் அனைவரும் உறுதுணையாக இருங்கள். அவை என்னென்ன? என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம். கோடை விடுமுறையில் குழந்தைகளுக்குப் பயனுள்ள பொழுதுபோக்குகளின் லிஸ்ட் இதோ.
நர்சரிக்குச் செல்லவும்: உங்கள் குழந்தைகளுக்கு தோட்டக் கலையைக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், நல்ல பொழுதுபோக்காகவும் அமையும். மேலும், வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டாம் என்று நினைத்தால், உங்களது ஊரில் உள்ள நர்சரிக்கு அழைத்துச் செல்லவும். இங்கு சென்று பார்க்கும்போது அவர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
படிக்கும் ஆர்வத்தை வளர்த்தல்: வாசிப்பு என்பது குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் அருமருந்தாக உள்ளது. எனவே கோடைக்காலத்தில் சிறிய சிறிய கதை புத்தகங்களை உங்களது குழந்தைகளின் கையில் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். புத்தகத்தின் உதவியோடு அவர்கள் வேறு உலகிற்கு பயணிக்க முடியும். இது குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்க உதவியாக இருக்கும். வாசிப்பு உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற உதவுகிறது. இந்த விஷயங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், குழந்தைகள் படிக்க விரும்பும் புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக்கொடுக்கவும்.
செல்லப் பிராணிகள் வளர்ப்பு: நாய், பூனை, முயல், போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்பு மிகவும் ஈடுபாட்டுடன், கற்றல் மற்றும் மகிழ்ச்சியளிக்கும் பொழுதுபோக்காக இருக்கலாம். இது ஒரு குழந்தையைப் பொறுப்புள்ளவராகவும், பொறுமையாகவும், இரக்கமுள்ளவராகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும் மாற்ற உதவும். ஒருவேளை உங்களால் வீட்டில் வளர்க்க முடியவில்லை என்றால், உள்ளூர் விலங்கு தங்குமிடத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய அவர்களை ஊக்குவிக்கலாம்.
பாடல் கற்றுக்கொடுத்தல்: உங்களது குழந்தைகளுக்கு பாடல் பாடுவதில் ஆர்வம் இருந்தால் பாட்டு வகுப்புகளுக்கு அவர்களை அனுப்பி வைக்கவும். இதன் மூலம் மனம் நிம்மதியாகவும், மேம்பட்ட சுவாசம், இதய செயல்பாடு போன்ற பல உடலியல் நன்மைகளை வழங்குகிறது. ஒரு தொழில்முறை பாடும் வகுப்பில் சேர்வது உங்கள் குழந்தையின் திறமையை அதிகரிக்க உதவுவதோடு, அவர்களின் பாடும் திறனை மேம்படுத்தவும் உதவும்.
சமையல் கற்றுக்கொடுத்தல்: குழந்தைகளுக்கு சமையல் கற்றுக்கொடுப்பது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக அமையும். அனைத்து வயதினரையும் ஈர்க்கக்கூடிய விஷயமாக உள்ளது. எனவே, அவர்களுக்குப் பிடித்த உணவை எப்படி சமைப்பது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில், தீ இல்லாத உணவுகளை தயார் செய்ய வைத்து பின்னர் வழக்கமான சமையல் திறன்களை நோக்கி முன்னேற வைக்கலாம்.
நாணயங்களைச் சேகரித்தல்: நாணயங்களைச் சேகரிப்பது மிகவும் சுவாரஸ்யமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். நாணயங்களை சேகரிக்கவும், அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும். தனித்துவமான மற்றும் அரிய நாணயங்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் நாணயங்களில் உள்ள அம்சங்கள், கல்வெட்டுகள் மற்றும் படங்களைப் புரிந்துகொள்ள உதவலாம்.
புகைப்படம் எடுத்தல்: 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு புகைப்படம் எடுப்பதை ஒரு பொழுதுபோக்காக நீங்கள் கற்றுக்கொடுக்கலாம்.. அவர்களுக்குத் தேவையான கேமராவை வாங்கிக்கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டுங்கள். . பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள், படங்களைக் கிளிக் செய்து அவர்களுக்கு மகிழ்வான தருணங்களை வழங்குவதற்கு உதவியாக இருங்கள்.