நம் உடலின் முக்கியமான பகுதியில் ஒன்று சிறுநீரகம். உடலில் உள்ள நீர்ம சமநிலையையும் எலெக்ட்ரோலைட் அளவையும் சிறுநீரகங்கள் தான் பராமரித்து வருகிறது. அதன் நாள்பட்ட நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மார்ச் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்க இதையெல்லாம் செய்யாதீங்க…
வலி நிவாரணி மாத்திரைகள் : ஓவர்-தி-கவுண்டர்(Over-the-Counter) வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துதல் சிறுநீரகத்துக்கு நல்லதல்ல. தலைவலி அல்லது மூட்டுவலியாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையின்றி, வலிநிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால், இப்போதே நிறுத்துங்கள். வலி நிவாரணிகள் உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.
நீர் அருந்தாமை : போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு ஆபத்தான விஷயம். நீங்கள் குடிக்கும் நீர் உடலில் இருந்து சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் வலிமிகுந்த சிறுநீரக கற்களைத் தவிர்க்க உதவுகிறது. ஆரோக்கியமான சிறுநீரகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் : சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவைத் தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரக நோய் உள்ளவர்களை எதிர்மறையாக பாதிக்கும். உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் இல்லாவிட்டாலும், தொடர்ந்து உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள், உயர் இரத்த சர்க்கரை போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
தூக்கமின்மை : போதுமான அளவு தூங்கவில்லை என்றால் கூட அது சிறுநீரகத்தை பாதிக்கும். தூக்கத்திற்கும் சிறுநீரகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், சிறுநீரக செயல்பாடு தூக்க-விழிப்பு சுழற்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது 24 மணி நேரத்திற்கும் சிறுநீரகங்களின் பணிச்சுமையை ஒழுங்குபடுத்துகிறது. எனவே மற்ற நன்மைகளுடன், ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கும் ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்.
அதிகப்படியான மது அருந்துதல்: ஒரு நாளைக்கு நான்கு பானங்களுக்கு மேல் குடிப்பது நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. அதிக ஆல்கஹால் உட்கொள்வது யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது சிறுநீரகத்தை பாதிக்கிறது. அதிக குடிப்பழக்கம் உள்ள புகைப்பிடிப்பவர்கள் சிறுநீரக நோய்களுக்கு இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இறைச்சிகளை அதிகம் உட்கொள்ளுதல் : விலங்கு இறைச்சியில் உள்ள புரதம் இரத்தத்தில் அதிக அளவு அமிலத்தை உருவாக்கலாம். இது சிறுநீரகங்களை சேதப்படுத்தும் மற்றும் அதிகப்படியான நுகர்வு அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும், சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து அமிலத்தை விரைவாக அகற்ற முடியாத நிலை. சமச்சீரான உணவை உண்ணுங்கள், மேலும் இறைச்சியுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சேர்க்கவும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது : நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். வழக்கமான உடற்பயிற்சி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்தமாக சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.