பொதுவாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்படும். இந்த நிலை fatty liver என்று அழைக்கப்படும். ஆனால், மது அருந்துவதால் மட்டுமே கல்லீரல் பாதிக்கப்படுவதில்லை. Non-alcoholic fatty liver disease (NAFLD) என்ற நோய், மது அல்லாமல், கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிக்கிறது. அதாவது மது அருந்தாமல் இருந்தால் கூட, வேறு சில காரணங்களால் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும். இந்த நோய் உலக அளவில் கணிசமான எண்ணிக்கையில் பல நபர்களை பாதித்து வருகிறது.
உடலில் நச்சுக்களை நீக்கும் செயலில் ஈடுபடும் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு அவ்வளவு எளிதாக வெளியே தெரியாது. அதாவது, கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட ஆரம்ப கால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. இதனால், கல்லீரல் நோய் முற்றிய நிலையில் தான் பலரும் இத்தகைய பாதிப்பு இருப்பதையே தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், NAFLD என்பது தற்போது அதிகரித்து வருவதால், பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, கல்லீரல் கொழுப்பு நோயின் ஆரம்பகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அறிகுறி தோன்றுவதை உறுதி செய்துள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.
கல்லீரல் கொழுப்பு நோய் இருந்தால் காலையில் இந்த அறிகுறி காணப்படும் : காலையில் எல்லாரும் சுறுசுறுப்பாக, புத்துணர்ச்சியோடு கண்விழிப்பதில்லை. பலருக்கும் கொஞ்ச நேரம் சோர்வாக இருக்கும். காலை சோர்வு என்பது எழுந்த பின் நீண்ட நேரம் சோம்பலாக இருப்பது போன்ற உணர்வு, தீவிர உடல்சோர்வு மற்றும் நிறைய நேரம் ஓய்வெடுத்தாலும் நீடிக்கும் சோர்வு ஆகியவற்றைக் குறிக்கும். காலையில் சோர்வு என்பது பல நோய்களுடன் தொடர்புடையது என்றாலும், அது கல்லீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த அறிகுறி உங்கள் அன்றாட வேலைகளை கடுமையாக பாதிக்கலாம். உடல் ரீதியான சோர்வு, மனநிலை மாற்றம் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
NAFLD-ன் வேறு சில அறிகுறிகள் : மேலே குறிப்பிட்டுள்ளது போல சோர்வு தவிர, மேற்புற வயிற்றில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவதும் கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு ஏற்பட்ட சிலருக்கு ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ் (NASH) என்ற நிலை உருவாகலாம். இது கொழுப்பு கல்லீரல் நோயின் மிகவும் தீவிர வடிவமாகும். இதனால், கல்லீரல் அழற்சி, அட்வான்ஸ்டு லிவர் சிரோசிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம்.
ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் ஏன் ஏற்படுகிறது? கல்லீரலில் ஏன் கொழுப்பு சேர்கிறது என்பதற்கான சரியான காரணம் இது வரை நிபுணர்களால் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு, அதிக கொலஸ்டிரால், ஆகிய குறைபாடுகளுடன் தொடர்புடையது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது பிரச்சனையால், உடல்நலம் பாதிக்கப்படுவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகளால், ஒருங்கிணைந்த உடல்நலப் பிரச்சனைகளால் கல்லீரலில் கொழுப்பு படிகின்றன. இதனால் தான், மது அருந்தாதவர்களும் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
சில ஆய்வுகள் மெடிட்டரேனியன் உணவைப் பின்பற்றுவது மூலம், கல்லீரலில் சேமிக்கப்படும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று காட்டுகின்றன. உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்க்கலாம். ஏரோபிக் பயிற்சிகள் கல்லீரலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.