ஒவ்வொரு புத்தாண்டிலும் குறிப்பிட்ட உறுதிமொழிகளை செய்து கொண்டு, பின்னால் அதைச் செய்ய முடியவில்லை என்று கருதும் லட்சக்கணக்கான நபர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அந்த உறுதிமொழிகள் உங்கள் தனிப்பட்ட வாழ்வின் இலக்கு நோக்கியதாக இருக்கும் பட்சத்தில், அவற்றை தொடர்ந்து செயல்படுத்த முயல்வதும், கைவிடுவதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம்.
சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது : பொழுது போக்கவும், சக ஊழியர்கள், குடும்ப உறவுகள், முகம் அறியா நண்பர்கள் என்று எண்ணற்ற மக்களிடம் தொடர்பில் இருக்கவும் சமூக ஊடகங்கள் அவசியமானவை தான். அவை நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு தினசரி 1 மணி நேரம் பயன்படுத்தலாம். ஆனால், சமூக ஊடகங்களே கதி என்று ஆகிவிடக் கூடாது. இதனால் நம் வாழ்வின் அற்புதமான தருணங்களை தொலைத்து விடுவோம்.
மோதல்களை தவிர்ப்பது : யாருடனும், எதற்காகவும் சண்டையிடக் கூடாது என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மோதல் என்பது அந்த சமயத்தில் வெற்றியாளர் என்ற உணர்வை தந்தாலும், வேறொரு தருணத்தில் அவை உங்களுக்கு மன உளைச்சலைத் தருவதாக அமையும். பல ஆண்டுகளுக்கு ஆறாத வடுவாக நீடிக்கும். ஆகவே மோதல்களை தவிர்க்கவும்.
பல பொறுப்புகளை சுமப்பது : ஒரு சமயத்தில் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். நாம் ஒரு சூப்பர்ஹீரோ என்ற நினைப்பில் பல பொறுப்புகளை தூக்கி சுமக்கக் கூடாது. சுருக்கமாக சொன்னால், அகல கால் வைக்காதே என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஒற்றை இலக்கின் நோக்கி தீர்க்கமான உறுதியுடன் செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.
எதிர்மறை ஆற்றல் : எப்போதும் மனதில் எதிர்மறை ஆற்றல் கொண்டவராக இருக்கக் கூடாது. நேர்மறை ஆற்றல் கொண்டவராக செயல்பட வேண்டும். எதையும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் மனதில் ஆழமாக இருந்தால் எதிர்மறை ஆற்றல் நாளடைவில் குறைந்து விடும்.
ஒப்பீடு கூடாது : உங்களுக்கென்று தனித்துவ குணம், திறமை எல்லாம் இயற்கை வழி கிடைத்திருக்கும். அதை நினைத்து மனம் நிறைவடைய வேண்டும். மற்றவர்களை பார்த்து, அவரை போல நாம் இல்லையே என்று மனம் ஏங்கக் கூடாது. ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு நோக்கமும், அர்த்தமும் இருக்கும். நமக்கானதை நாம் புரிந்து கொண்டு வாழ்ந்தால் போதுமானது.
குறை காண்பது : உங்களின் செயல்பாடுகள் உங்களுக்கே பிடிக்காதவையாக தோன்றும். இதனால் தன்னை தானே வருத்திக் கொள்வீர்கள். இதன் எதிரொலியாக தன்னம்பிக்கை குறையும். தன்னம்பிக்கை உடைந்தால் எதிர்காலத்திற்கு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள இயலாது. எதையும் யோசித்து, சிந்தித்து செயல்படுத்தவும். செய்த பின் வருந்த வேண்டாம்.