சமூகத்தில் பெண்களுக்கு உளவியல் ரீதியாக எத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன, அவர்களுக்கான பாதுகாப்பின்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து பல்வேறு செய்திகளை படித்திருப்போம். ஆனால், நாம் உணர மறக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் ஆண்களுக்கும் இதேபோன்று பொதுவான பிரச்சினைகள் ஏற்படும் என்பதுதான்.
குறிப்பாக ஆண்களை பொருத்தவரை சுய மதிப்பீடு, தன்னம்பிக்கை போன்றவற்றை சார்ந்த விஷயங்களில் சிக்கல் உண்டாகக் கூடும். தனக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பிறரிடம் மனம் விட்டு பேசுவதற்கு கூட ஆண்களுக்கு வாய்ப்பு இருக்காது. மேலும் ஆண்கள் எதிர்கொள்ளக் கூடிய பொதுவான சிக்கல்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
பழைய பந்தம் : ஒரு ஆணின் வாழ்க்கையில் முன்னாள் காதலி உண்டு என்றால், அந்தப் பந்தத்தை மறப்பதற்கு ஆண்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள். மறந்தும், மறக்க முடியாமலும் தவிப்பார்கள். இதனால், புதியதொரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் சிக்கல் ஏற்படும். மன பதற்றம் உருவாகும். புதிய பந்தத்துடன் தொடங்குகின்ற வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இயலாமல் தடுமாற்றம் அடைவார்கள்.
உடல் தோற்றம் : அழகு, உடல் தோற்றம் போன்றவற்றுக்கு பெண்கள் மட்டுமே மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று எண்ணி விடாதீர்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும். அழகான தோற்றம், தலைமுடி அழகு, தொப்பை இல்லாத கட்டுக்கோப்பான உடல்வாகு என பல அம்சங்கள் குறித்து ஆண்கள் கவலை கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் உடல் குறித்த ஒப்பீடானது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்.
வேலை பாதுகாப்பு : இருப்பதிலேயே மிக பெரிய உளவியல் சிக்கல் இதுதான். குடும்பத்தை பொருளாதார ரீதியாக தாங்கி நிற்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதால், தான் வேலையிழக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் தவிக்க நேரிடும் என்ற அச்சமே ஒரு ஆணுக்கு மிகுந்த கவலைகளை உண்டாக்கும். இதனால், பணியிடத்தில் பல சமரசங்களை செய்து கொள்வார்கள். இந்த மன நெருக்கடியை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
உணர்வுகளை வெளிப்படுத்துதல் : தனக்குள் இருக்கின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நிறைய ஆண்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். தன்னுடைய கவலைகளை கொட்டித் தீர்ப்பதை அவமானமாக கருதும் சிலர், அதற்கு தீர்வு காண இயலாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது ஆண்களின் மன நலனை வெகுவாகப் பாதிக்கிறது.
எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யாமை : ஒரு ஆண் நபரை சுற்றியுள்ள அனைவருக்குமே அவர் மீது ஏதோ ஒரு வகையில் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இதனால், ஆண்களுக்கான நெருக்கடி அதிகரிக்கிறது. பிறருடைய எதிர்பார்ப்புகளை ஆண்கள் பூர்த்தி செய்யாத பட்சத்தில், அவர்களுக்கு மிகுந்த அவப்பெயர் உண்டாகிவிடுகிறது. குறிப்பாக ஆணுக்கு திறனற்ற நபர் என்ற முத்திரை குத்தப்படுகிறது.