வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முக்கிய படி ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமாக மாற்றுவதே. சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல நாட்களின் வெற்றியே சிறிது சிறிதாக வாழ்வின் வெற்றிப்படிகளை நோக்கி நம்மை அழைத்து செல்லும். நீங்கள் காலையில் எழுந்த பிறகு செலவழிக்கும் முதல் சில மணி நேரங்கள் மிகவும் முக்கியம். நீங்கள் காலை நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை பொருத்தும் அன்றைய நாள்
உங்களுக்கு சிறப்பாக அமைகிறது.
எனவே, காலையில் நேர்மறை பழக்கவழக்கங்களில் ஈடுபடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாள் முழுவதும் மனது நிலையாக இருக்க மற்றும் சிறப்பான வாழ்க்கை முறையை அடைய நேர்மறை காலை வழக்கங்கள் உறுதுணையாக இருப்பதாக வாழ்வில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் உறுதியாக நம்புகிறார்கள். வெற்றிகரமான ஆண்கள் பின்பற்றி வரும் சில முக்கிய காலை வழக்கங்களை இங்கே பார்க்கலாம்...
ஊக்குவிக்கும் செயல்பாடுகள்: காலை எழுந்தவுடன் உடலுக்கும் மனதுக்கும் ஊக்கம் மற்றும் புத்துணர்ச்சி அழைக்கும் செயல்களை செய்ய வேண்டும். உங்கள் மனதுக்கு ஊக்கமளிக்கும் பாடல்களை கேட்கலாம், உங்களுக்கு மிகவும் விருப்பமான புத்தகங்களின் ஊக்கமளிக்கும் பகுதிகளை படிக்கலாம், உங்கள் மனதை ஒருமுகப்படுத்த உதவும் விஷயங்களை கூட செய்யலாம். காலை எழுந்தவுடன் நீங்கள் செய்யும் முதல் செயல் உங்களை ஊக்கப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
உடற்பயிற்சிகள்: பளு தூக்குவது அல்லது தசையை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் உங்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட காலை நேரங்களில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். சிறிது நேரம் வாக்கிங் அல்லது ஜாகிங் செல்வது, உடலை நன்றாக ஸ்ட்ரெச்சிங் செய்வது போன்ற எளிய பயிற்சிகள் நாள் முழுவதும் உங்களை முற்றிலும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் உணர வைக்கும்.
பிரார்த்தனை: உங்களையும் உங்கள் நெருங்கியவர்களையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறும் வகையில் தினசரி காலை பிரார்த்தனை செய்து வருவது உங்களை திருப்தியாக உணர வைக்கும். நமக்கு கிடைத்தவைக்கு நாம் நன்றி சொல்வதில் நமக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். பிரார்த்தனை மூலம் கடவுளுக்கு நன்றி சொல்லும் பழக்கம் உங்களை தன்னம்பிக்கை மற்றும் தன்னடக்கத்துடன் வைத்திருக்கும்.
உறுதிமொழிகள்: உங்கள் நாளை தொடரும் முன் காலை நேரத்தில் உங்களால் முடிந்த அளவு நேர்மறையான உறுதிமொழிகளை படிக்கலாம் அல்லது காதால் கேட்கலாம். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இதற்காக 5 - 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள். வாழ்க்கையில் வேற்றி பெறுவது பற்றிய பிரபலமான நபர்களின் அனுபவங்கள் மற்றும் நேர்மறையான மேற்கோள்களை நீங்கள் படிப்பதன் மூலமோ அல்லது கேட்பதன் மூலமோ உங்களுக்கு அன்றைய நாள் இனிமையானதாக மாறும்.